கர்நாடக அரசை கவிழ்க்க முயற்சி மத்திய அரசு மீது பிரியங்க் ‘பகீர்’
பெங்களூரு: கர்நாடக அரசை கவிழ்க்க, மத்திய அரசு முயற்சி செய்வதாக, உள்துறை அமைச்சர் பிரியங்க் கார்கே கூறியுள்ளார். பெங்களூரில் நேற்று அவர் அளித்த பேட்டி: வருமான வரித்துறை, அமலாக்கத்துறை மூலம் நமக்கு எதிராக ரகசிய கண்காணிப்பு நடக்கிறது. அனைவரும் உஷாராக வேண்டும் என்று, அமைச்சர்களுக்கு முதல்வர் அறிவுறுத்தினார். ஆனால், இதை வைத்து எதிர்க்கட்சியினர் அரசியல் செய்கின்றனர். எங்களுக்கு கிடைத்த தகவல்படி, கர்நாடக அரசை கவிழ்க்க, மத்திய அரசு முயற்சித்து வருகிறது. மஹாராஷ்டிரா, கோவா, மத்திய பிரதேசத்தில் ஆட்சி எப்படி கலைக்கப்பட்டது என்று வரலாற்றை பார்த்தால் தெரியும். ஒக்கலிக ச மூகத்தை சேர்ந்த சிவகுமார் முதல்வர் ஆனதை, குமாரசாமியால் பொறுத்து கொள்ள முடியவில்லை. குமாரசாமி முன்னாள் முதல்வர், தற்போது மத்திய அமைச்சர். குறைந்தபட்சம் தனது பதவிக்காவது அவர் மரியாதை கொடுக்க வேண்டும். கார்கே குடும்பத்தை பற்றி பேச அவருக்கு உரிமை இல்லை. சித்தராமையாவுக்கு எதிராக சிவகுமார் ரகசிய உளவு பார்த்ததாக, குமாரசாமி கூறுகிறார். தயவுசெய்து, அவர் ஆதாரத்துடன் பேச வேண்டும். பொறுப்பான பதவியில் இருப்பவர்கள் பேசுவதற்காக ஒரு மொழி உள்ளது. அதை குமாரசாமி மறக்கக்கூடாது. அவர் எந்த மொழியில் பேசுகிறாரோ , அதை மொழியில் அவருக்கு பதிலடி கொடுக்கவும் நாங்கள் தயார். கே.பி.எஸ்.சி.,யில் நடந்த முறைகேடு குறித்து, சி.ஐ.டி., சிறப்பான விசாரணை நடத்தியது. ஆனாலும், எஸ்.ஐ.டி., விசாரணைக்கு, உயர் நீதிமன்றம் ஏன் உத்தரவிட்டது என தெரியவில்லை. கால்நடை மருத்துவர் தேர்வு முறைகேடு வழக்கில், அமலாக்கத்துறை ஏன் இவ்வளவு ஆர்வம் காட்டுகிறது என தெரியவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.