உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு /  துரஹள்ளி மனை பிரச்னைக்கு தீர்வு காண பி.டி.ஏ., முயற்சி

 துரஹள்ளி மனை பிரச்னைக்கு தீர்வு காண பி.டி.ஏ., முயற்சி

பெங்களூரு: துரஹள்ளி சிறு காப்புக் காட்டை ஒட்டி நிலவும் வீட்டுமனை பிரச்னைக்கு தீர்வு காண்பதற்கு வசதியாக, உயர்மட்ட ஆலோசனை கூட்டத்திற்கு தேதி நிர்ணயிக்கும்படி, வனத்துறைக்கு பி.டி.ஏ., என்ற பெங்களூரு மேம்பாட்டு ஆணையம் கடிதம் எழுதியுள்ளது. துரஹள்ளி காப்புக் காட்டை ஒட்டி, 1,500 ஏக்கர் நிலங்களை கையகப்படுத்தி, 4,983க்கும் அதிகமான வீட்டுமனைகளை பி.டி.ஏ., அமைத்தது. 2002ல் துவங்கிய இப்பணி, 2003 வரை நீடித்தது. பின், இந்த வீட்டுமனைகளை சட்டப்பூர்வமாக மக்களுக்கு குலுக்கல் முறையில் விற்பனை செய்தது. 2004 வரை மனை விற்பனை நடந்தது. இதற்கிடையில், தேசிய பசுமை தீர்ப்பாயம் மற்றும் உச்ச நீதிமன்ற வழிகாட்டுதலின்படி, காப்புக்காட்டை ஒட்டி, 100 மீட்டர் சுற்றளவு பகுதியை தாங்கல் மண்டலமாக (பப்பர் ஜோன்) வனத்துறை அறிவித்தது. இதனால், ஏற்கனவே பி.டி.ஏ.,விடம் வீட்டுமனை வாங்கிய 1,300க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டனர். இதைத்தொடர்ந்து நடத்தப்பட்ட ஆய்வில், 1,000 மனைகளுக்கு எந்தப் பிரச்னையும் இல்லை என்று அறிவிக்கப்பட்டது. 300 மனைகளில் வீடு கட்டுவதற்கான வரைபட அனுமதி பெற முடியாமல் பயனாளிகள், 20 ஆண்டுகளுக்கும் மேலாக தவித்து வருகின்றனர். கடந்த ஜனவரியில் பி.டி.ஏ., ட்ரோன்கள் மூலம் சர்வே நடத்தியது. இந்நிலையில், இந்தப் பிரச்னைக்குத் தீர்வு காண்பதற்கு வசதியாக உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்துவதற்கான கூட்டத்திற்கு தேதி நிர்ணயித்து ஏற்பாடு செய்யும்படி, வனத்துறை மண்டல அதிகாரிக்கு, பி.டி.ஏ., முறைப்படி கடிதம் எழுதியுள்ளது. வனத்துறையுடன் இணைந்து ஒரு கூட்டு ஆய்வு நடத்தி, வன எல்லைக்கும் பி.டி.ஏ., நிலங்களுக்கும் இடையிலான துாரத்தை உறுதி செய்ய பி.டி.ஏ., திட்டமிட்டுள்ளது. இதன் மூலமே சட்டப்பூர்வமான தீர்வு எட்டப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை