சிவில் வழக்குகளுக்கு வழிகாட்டுதல் வெளியீடு
பெங்களூரு: சிவில் தகராறு வழக்குகளை தீர்த்து வைப்பது தொடர்பாக அனைத்து போலீஸ் நிலையங்களுக்கும் டி.ஜி.பி., சலீம் வழிகாட்டுதல் வெளியிட்டுள்ளார். சொத்து, பணம், தனிப்பட்ட உரிமைகள் தொடர்பாக இருதரப்பினர் இடையே ஏற்படும் மோதல் சிவில் வழக்கு எனப்படும். இதுதொடர்பான வழக்குகளை தீர்த்து வைக்க, ஒரு தரப்பிடம் இருந்து சில போலீஸ் அதிகாரிகள், போலீசார் லஞ்சம் வாங்குவதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதைத் தவிர்க்க சிவில் தகராறு வழக்குகளை தீர்த்து வைக்க, டி.ஜி.பி., சலீம், அனைத்து போலீஸ் நிலையங்களுக்கும் வழிகாட்டுதல் வெளியிட்டுள்ளார். அந்த வழிகாட்டுதலில் அவர் கூறியிருப்பதாவது: எந்தவொரு போலீஸ் அதிகாரியும், தன்னிடம் கிடைக்கும் புகாரை வைத்து அது சிவில் தகராறு என்று தெரிந்தால், உடனடியாக வழக்குப்பதிவு செய்து, நான்கு நாட்களுக்குள் முதற்கட்ட விசாரணையை முடிக்க வேண்டும் வழக்கு குறித்து மூத்த அதிகாரிகள் கவனத்திற்கு கொண்டு செல்ல வேண்டும் வழக்கு குறித்து 'ஸ்டேஷன் டைரி'யில் தெளிவாக குறிப்பிட வேண்டும் 'சிவில் நீதிமன்றத்திற்கு வழக்கை முன்னெடுத்து செல்வதற்கு பொருத்தமானது' என, புகார்தாரருக்கு கடிதம் அனுப்ப வேண்டும் புகார்தாரருக்கோ, எதிர்தரப்புக்கோ ஏதாவது ஒரு எதிர்பார்ப்புடன், போலீஸ் அதிகாரிகள் உதவினால் அது குற்றவியல் தவறாக கருதப்படும் அத்தகைய அதிகாரி மீது சட்டப்படி நடவடிக்கை, துறை ரீதியாக ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.