உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு / செய்யாத தவறுக்கு தண்டனையா? சித்தராமையாவுக்கு ஏ.எஸ்.பி., உருக்கமான கடிதம்

செய்யாத தவறுக்கு தண்டனையா? சித்தராமையாவுக்கு ஏ.எஸ்.பி., உருக்கமான கடிதம்

பெங்களூரு: பெலகாவியில் நடந்த நிகழ்ச்சியில், தன்னை அடிக்க கை ஓங்கியதால், விரக்தியடைந்த தார்வாட் ஏ.எஸ்.பி., நாராயணா பரமனி, முதல்வருக்கு எழுதியுள்ள உருக்கமான கடிதம் வெளியாகி உள்ளது.பெட்ரோலிய பொருட்களின் விலை உயர்வை கண்டித்து, ஏப்ரல் 28ம் தேதி, பெலகாவியில் காங்கிரஸ் சார்பில் போராட்டம் நடந்தது.ஆளுங்கட்சியை எதிர்த்து, எதிர்க்கட்சியான பா.ஜ.,வும் பதிலடியாக போராட்டம் நடத்தியது.

ஓய்வு பெற முடிவு

காங்கிரஸ் போராட்டத்தில் முதல்வர் சித்தராமையா உரையாற்றும்போது, கூட்டத்தில் புகுந்த பா.ஜ.,வினர், அரசுக்கு எதிராக கோஷமிட்டனர். இதனால் முதல்வர் எரிச்சல் அடைந்தார். அவரின் கோபம், போலீசார் மீது திரும்பியது.பாதுகாப்பு பொறுப்பை ஏற்றிருந்த தார்வாட் ஏ.எஸ்.பி., நாராயணா பரமனியை, மேடைக்கு அழைத்து வசைபாடினார். ஆத்திரத்தில் அவரை அடிக்க கையை ஓங்கினார். இந்த வீடியோ சமூக வலைதளத்தில் பரவியது.முதல்வரின் செயலுக்கு, பலரும் அதிருப்தி தெரிவித்தனர். 'உயர் அதிகாரியை மேடையில் அவமதித்தது சரியல்ல' என முதல்வருக்கு கண்டனம் குவிந்தது.இந்த சம்பவம், ஏ.எஸ்.ஐ., நாராயணா பரமனியை அதிகம் பாதித்தது. விருப்ப ஓய்வு பெற முடிவு செய்து, அரசுக்கும் கோரிக்கை அனுப்பி வைத்துள்ளார்.முதல்வருக்கு ஏ.எஸ்.பி., நாராயணா பரமனி உருக்கமாக எழுதியுள்ள கடிதம்:முதல்வரான நீங்கள் என்னை அவமதித்ததால், மனம் நொந்து விருப்ப ஓய்வு பெற, முடிவு செய்துள்ளேன். 1994ல் எஸ்.ஐ.,யாக நியமிக்கப்பட்ட நான், 31 ஆண்டுகளாக மாநில போலீஸ் துறையில் பலவேறு இடங்களில், பல பதவிகளை வகித்தேன்.எஸ்.ஐ., முதல் கூடுதல் எஸ்.பி., வரை சட்டத்துக்கு உட்பட்டு பணியாற்றுகிறேன். நடப்பாண்டு ஏப்ரல் 28ம் தேதி, மத்திய அரசின் விலைவாசி உயர்வை கண்டித்து, உங்களின் தலைமையில், பெலகாவியில் காங்கிரஸ் போராட்டம் நடந்தது.போராட்ட பாதுகாப்பு பொறுப்பை, உயர் அதிகாரிகள் என்னிடம் ஒப்படைத்தனர். எனக்கு அளித்த பொறுப்பை, கீழ் நிலை அதிகாரிகள், ஊழியர்களுடன் நான் எந்த குறைகள் இல்லாமல் செய்தேன்.காங்கிரஸ் தொண்டர்கள், பொது மக்கள் அமர்ந்திருந்த இடத்தின் பாதுகாப்பு பொறுப்பு, வேறொரு எஸ்.பி., அளவிலான அதிகாரியிடம் இருந்தது.அங்கு யாரோ நான்கைந்து பேர், கருப்புக் கொடியை ஏந்தி கோஷம் போட்டனர். அப்போது நீங்கள் உரையாற்றுவதை நிறுத்தி, என்னை நோக்கி, கையை நீட்டி, 'யாருய்யா இங்கே எஸ்.பி., இங்கே வா' என, அழைத்தீர்கள்.

கண்ணீர்

அந்த இடத்தில் வேறு போலீஸ் அதிகாரி யாரும் இல்லாததால், உங்களின் அழைப்புக்கு மதிப்பளித்து, மேடைக்கு வந்தேன். மரியாதையுடன் நின்றேன்.நீங்கள் எந்த விளக்கமும் கேட்காமல், திடீரென என் கன்னத்தில் அறைய கையை ஓங்கினீர்கள். அப்போது நான் சில அடிகள் பின்னோக்கி சென்றதால், கன்னத்தில் அடி விழாமல் தப்பினேன்.நான் செய்யாத தவறுக்கு, அவமானத்துக்கு ஆளானேன். இந்த சம்பவம் தொலைக்காட்சி ஊடகங்களில், இரண்டு நாட்கள் வெளியாகின. இதை நீங்களும் கவனித்திருப்பீர்கள்.உங்கள் அடியில் இருந்து தப்பினேனே தவிர, பொது இடத்தில் நடந்த அவமானத்தில் இருந்து தப்ப முடியவில்லை. சம்பவம் நடந்த இடத்தில், பல்லாயிரக்கணக்கான மக்கள், அரசியல் பிரமுகர்கள், ஊடகத்தினர் இருந்தனர்.என் துறையின் அதிகாரிகளும் இருந்தனர். அவர்களின் கண் முன்னே எனக்கு அவமதிப்பு நடந்தது. உங்கள் பதவிக்கு கரும்புள்ளி ஏற்பட கூடாது என்பதால், மறு பேச்சு பேசாமல் மேடையில் இருந்து, கீழே இறங்கி சென்றேன்.போலீஸ் சீருடையில் இருந்த என்னை, பொது இடத்தில் அவமதித்ததால் துறை அதிகாரிகளின் மனதிடம் குறைந்துள்ளது. அவமதிப்புடன் நான் வீட்டுக்கு சென்றபோது, மனைவியும், பிள்ளைகளும் துயரம் தாங்காமல் கண்ணீர் சிந்தினர்.இதுகுறித்து, விசாரித்து எனக்கும், என் மனைவிக்கும் வந்த தொலைபேசி அழைப்புகளுக்கு பதில் அளிக்க முடியாமல், மன அழுத்தத்துக்கு ஆளானோம்.இவ்வளவு நடந்தும் முதல்வரோ அல்லது அவரது சார்பில் அரசு அதிகாரிகளோ, எனக்கு ஆறுதல் கூற முன் வரவில்லை. என்னுடன் பணியாற்றும் சக அதிகாரிகளும் கூட, எனக்கு நடந்த அவமதிப்பு குறித்து, குரல் எழுப்பவில்லை. என்னை நானே தைரியப்படுத்திக்கொண்டு பணிக்கு வந்தேன்.

சவால்

என்னிடம் பிரச்னைகளை கூற வரும் மக்களும் கூட, 'சார் உங்களுக்கே இந்த நிலை என்றால், எங்களை போன்ற சாதாரண மக்களின் கதி என்ன?' என கேள்வி எழுப்புகின்றனர்.துறையின் கூட்டங்கள், வேறு துறையினருடனான கூட்டங்களிலும், இதே போன்று பேசினர். யாரோ செய்த தவறுக்கு, நான் தண்டிக்கப்பட்ட வலி, என்னை தினமும் வாட்டுகிறது.எனக்கு நடந்த அவமதிப்புக்கே, என்னால் நியாயம் பெற முடியவில்லை. மற்றவருக்கு நியாயம் கிடைக்க செய்ய முடியுமா என்ற கேள்வி, எனக்குள் எழுந்துள்ளது.பொது மக்களின் பிரச்னைகளுக்கு தீர்வு கண்டு, போலீஸ் துறையில் பெருமையோடு பணியாற்றினேன். எனக்கும், சீருடைக்கும் இடையிலான பந்தம், தாயுடனான பந்தம் போன்றதாகும். அரசு ஊழியர்கள் பல நெருக்கடிகள், சவால்களை எதிர்கொண்டு பணியாற்றுகின்றனர்.தனிப்பட்ட பிரச்னைகளை ஒதுக்கி, அரசின் நலனுக்காக பணியாற்றும் எங்களை ஊக்கப்படுத்தும் வகையில், அரசு நடந்து கொண்டிருக்க வேண்டும்.ஆனால் உங்களின் செயல், என்னையும், மற்ற அரசு ஊழியர்களின் மனோ திடத்தை குலைத்துள்ளது.இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

முதல்வர் சமாதானம்

அதிகாரியின் விருப்ப ஓய்வு பெறும் முடிவால், முதல்வர் சித்தராமையா தர்ம சங்கடத்துக்கு ஆளானர். முதல்வரும், உள்துறை அமைச்சர் பரமேஸ்வரும், நேற்று மதியம் ஏ.எஸ்.பி., நாராயண பரமனியை போனில் தொடர்பு கொண்டு பேசி, சமாதானம் செய்து, 'விருப்ப ஓய்வு பெற வேண்டாம்' என, கேட்டுக் கொண்டனர்.இதனால் அவர் பணிக்கு வர ஒப்புக்கொண்டதாக, தகவல் வெளியாகியுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ