பல்கலை பெயர் மாற்றம் ரயில்வே அமைச்சர் கடிதம்
துமகூரு: துமகூரு பல்கலைக்கழகத்தின் பெயரை மாற்றக்கோரி முதல்வர், துணை முதல்வருக்கு ரயில்வே இணை அமைச்சர் சோமண்ணா கடிதம் எழுதி உள்ளார். கர்நாடகாவில் உள்ள புகழ்பெற்ற பல்கலைக்கழகங்களில் ஒன்று துமகூரு பல்கலைக்கழகம். இந்த பல்கலைக்கழகத்தின் பெயரை மாற்றக்கோரி, முதல்வர், துணை முதல்வர், துமகூரு மாவட்ட பொறுப்பு அமைச்சர் பரமேஸ்வர் ஆகியோருக்கு ரயில்வே இணை அமைச்சர் சோமண்ணா கடிதம் எழுதி உள்ளார். கடிதத்தில், சித்தகங்கா மடத்தின் சிவகுமார சுவாமிகள், மாநிலத்தில் உள்ள பல குடும்பங்களுக்கு இலவச கல்வி, வீட்டு வசதி போன்ற பல உதவிகளை செய்துள்ளார். பல குடும்பங்களின் முன்னேற்றத்துக்கு உறுதுணையாக நின்றுள்ளார். இப்படிப்பட்ட, ஒரு சிறந்த துறவியின் பெயரை துமகூரு பல்கலைக்கழகத்துக்கு சூட்ட வேண்டும். எனவே, துமகூரு பல்கலைக்கழகத்தை, 'பரமபூஜ்ய டாக்டர் ஸ்ரீ சிவகுமார் மகா ஸ்வாமிஜி' பல்கலைக்கழகம் என பெயர் சூட்ட வேண்டும். இது அவருக்கு அஞ்சலி செலுத்துவது போன்றதாகும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.