உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு / மழையால் விளைச்சல் பாழ் காய்கறி விலை கிடுகிடு

மழையால் விளைச்சல் பாழ் காய்கறி விலை கிடுகிடு

பெங்களூரு: மாநிலத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் கன மழை பெய்வதால், காய்கறி விளைச்சல் பலத்த சேதமடைந்தது. அவற்றின் விலை தொடர்ந்து ஏறுமுகமாக உள்ளது. கர்நாடகாவின் கோலார், சிக்கபல்லாபூர், ராம்நகர் என, பல்வேறு மாவட்டங்களில் இருந்து, பெங்களூருக்கு காய்கறிகள் வந்தன. தமிழகம், கேரளா, ஆந்திரா, தெலுங்கானாவில் இருந்தும், காய்கறிகள் பெருமளவில் வந்ததால், குறைந்த விலையில் காய்கறிகள் கிடைத்தன. தீபாவளி, தசரா பண்டிகைகளிலும் கூட விலை அவ்வளவாக உயரவில்லை. ஆனால் 'மோந்தா' புயலின் விளைவாக, மழையால் சில மாநிலங்கள் பாதிக்கப்பட்டன. காய்கறிகள் சேதமடைந்தன. வரத்து குறைந்ததால் விலை தொடர்ந்து அதிகரிக்கிறது. முருங்கைக்காய் விலை கிலோவுக்கு 150, பட்டாணி 160, பீன்ஸ் 90, கேரட் 100, பீட்ரூட் 80 ரூபாய் என, அனைத்து காய்கறிகளின் விலையும் அதிகரித்துள்ளது. புதிய விளைச்சல் வரும் வரை, காய்கறிகள், கீரைகளின் விலை குறையாது. அடுத்த 15 நாட்களுக்கு இதே நிலை நிலவும் என, வியாபாரிகள் தெரிவித்தனர். தற்போது திருமணங்கள், பெயர் சூட்டல், நிச்சயதார்த்தம் என, பல விதமான சுப நிகழ்ச்சிகள் அதிகமாக நடக்கின்றன. காய்கறி விலை உயர்வதற்கு இதுவும் ஒரு காரணம். விலை அதிகரிப்பதால், பொதுமக்களுக்கு சுமை ஏற்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி