மஹா., முதல்வர் பட்னவிசுடன் ரமேஷ் ஜார்கிஹோளி சந்திப்பு
மஹாராஷ்டிரா முதல்வர் தேவேந்திர பட்னவிஸை, கோகாக் பா.ஜ., - எம்.எல்.ஏ., ரமேஷ் ஜார்கிஹோளி சந்தித்து பேசினார்.கர்நாடகாவின் பெலகாவி, கோகாக் பா.ஜ., - எம்.எல்.ஏ., ரமேஷ் ஜார்கிஹோளி. இவர், பா.ஜ.,வில் இருந்து சமீபத்தில் நீக்கப்பட்ட எம்.எல்.ஏ., பசனகவுடா பாட்டீல் எத்னாலின் ஆதரவாளர். நேற்று முன்தினம் மாலை திடீரென மும்பை சென்ற ரமேஷ் ஜார்கிஹோளி, மஹாராஷ்டிரா முதல்வர் தேவேந்திர பட்னவிஸை சந்தித்து பேசினார்.'பா.ஜ.,வில் இருந்து எத்னாலை நீக்கி இருப்பது சரியல்ல. அவரை கட்சியில் தக்க வைப்பது அவசியம். நடுநிலையாக செயல்பட கூடியவர்கள் எங்கள் அணியில் உள்ளனர்.எத்னாலை கட்சியில் இருந்து நீக்கிய உத்தரவை திரும்ப பெற வேண்டும்; விஜயேந்திராவுக்கு பதிலாக வேறு ஒருவரை கர்நாடக பா.ஜ., தலைவராக நியமிக்க வேண்டும் என்று கட்சி மேலிடத்திடம் எடுத்து கூறுங்கள்' என்று, பட்னவிஸிடம், ரமேஷ் ஜார்கிஹோளி கோரிக்கை வைத்து உள்ளார்.இதற்கு பட்னவிஸிடம் இருந்து எந்த சாதகமான பதிலும் வரவில்லை என்று கூறப்படுகிறது. - நமது நிருபர் -