ஆர்.சி.பி., அணியே இம்முறையும் வெல்லும்
- நமது நிருபர் -: ''இம்முறையும் ஆர்.சி.பி., அணி தான், ஐ.பி.எல்., கோப்பையை வெல்லும்,'' என, இந்திய கிரிக்கெட் அணி முன்னாள் வீரர் வீரேந்திர ஷேவாக் கணித்து உள்ளார். ஐ.பி.எல்., துவங்கிய காலத்தில் இருந்து, 17 ஆண்டுகள் கோப்பையை பெறாத அணியாக ஆர்.சி.பி., இருந்தது. ஆனால், கடந்தாண்டு ஐ.பி.எல்., போட்டியில், கோப்பையை வென்று அசத்தியது. அது போல, இந்தாண்டும் ஆர்.சி.பி., அணி வீரர்கள் அனைவரும் 'பார்மில்' உள்ளனர். கடைசியாக, பஞ்சாப் கிங்க்ஸ் அணியை, 23 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, 'பிளே ஆப்' சுற்றுக்கு இந்த அணி முன்னேறியுள்ளது. அத்துடன், புள்ளிகள் பட்டியலில், 13 போட்டிகளில், 9ல் வெற்றி பெற்று, நான்கு தோல்வி அடைந்தாலும், 13 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது. இதற்கு பேட்டிங், பவுலிங், பீல்டிங் என, அனைத்து தரப்பிலும் சிறப்பாக செயல்பட்டதே காரணம். இது குறித்து வீரேந்திர ஷேவாக் கூறியதாவது: பிளே ஆப்பின் முதல் இரண்டு இடத்திற்கு எந்த சாம்பியன் அணி வேண்டுமானாலும் இடம் பெறலாம். தற்போதைய ஆர்.சி.பி., அணியினர் விளையாடும் முறை, இம்முறையும் அவர்களே கோப்பையை தட்டி செல்வது உறுதி. அதே வேளையில், ஆர்.சி.பி.,க்கு இணையாக குஜராத் டைட்டன்ஸ் அணி வீரர்கள் உள்ளனர். ஆர்.சி.பி.,யின் கோப்பை கனவை தடுக்கும் சக்தி இந்த அணிக்கு உள்ளது. குஜராத் அணி பவுலர்கள் சிறப்பாக செயல்படுகின்றனர். இரு அணிகளின் முதல் மூன்று வீரர்கள், அணியின் ஸ்கோரை உயர்த்துபவர்களாக உள்ளனர். அனைத்தையும் கணித்து பார்க்கும் போது, ஆர்.சி.பி., அணியின் ரசிகர்களின், 'இ சாலா கப் நம்தே' என்ற கூற்று நனவாக வாய்ப்பு உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.