கான்ட்ராக்டரை கொன்றவர் வீட்டை எரித்த உறவினர்கள்
ஹாவேரி : நிலப் பிரச்னையால் கான்ட்ராக்டர் கொலை செய்யப்பட்டதற்கு பழிவாங்க, கொலையாளியின் வீடுகளுக்கு உறவினர்கள் தீ வைத்ததால் பதற்றம் நிலவுகிறது.ஹாவேரி மாவட்டம், ஷிகாவியை சேர்ந்தவர் சிவானந்த குன்னுார், 40; கான்ட்ராக்டர். சில ஆண்டுகளுக்கு முன்பு ஒரு சென்ட் நிலம் வாங்கினார். இந்த நிலம் தொடர்பாக எழுந்த பிரச்னை, நீதிமன்றம் வரை சென்றது. நீதிமன்றமும், சிவானந்த குன்னுாருக்கு ஆதரவாக தீர்ப்பளித்தது.நேற்று முன்தினம் மதியம், ஷிகாவி நகரில் ஒரு கும்பலால் சிவானந்த குன்னுார் படுகொலை செய்யப்பட்டார். குற்றவாளிகளை பிடிக்க, தனிப்படைகளை போலீசார் அமைத்துள்ளனர். இதற்கிடையில், போலீசாரின் முதல் தகவல் அறிக்கையில், நாகராஜ் சவதட்டி முக்கிய குற்றவாளியாக சேர்க்கப்பட்டு உள்ளார். இவ்வழக்கில், ஹனுமந்த், அஷ்ரப், சுதீப், சுரேஷ் ஆகியோரும் சேர்க்கப்பட்டுள்ளனர்.நேற்று காலை சிவானந்த குன்னுார் குடும்பத்தினர், நாகராஜ் சவதட்டி வீட்டுக்கு சென்றனர். வீட்டின் மீது பெட்ரோல் ஊற்றி, தீ வைத்தனர். வீடு முழுதும் தீ பரவியது.அங்கிருந்தவர்கள் தீயணைப்பு படையினருக்கும், போலீசாருக்கும் தகவல் தெரிவித்தனர். அங்கு வந்த தீயணைப்பு படையினர், தீயை அணைத்தனர். வீட்டில் யாரும் இல்லாததால், உயிர் சேதம் ஏற்படவில்லை. அப்பகுதியில் பதற்றம் நிலவுவதால், போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.