உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு / மனித - விலங்கு மோதலை தடுக்க மறு குடியேற்றம்: ஈஸ்வர் கன்ட்ரே வனப்பகுதிக்குள் வசிக்கும் மக்களை காலி செய்ய அமைச்சர் யோசனை

மனித - விலங்கு மோதலை தடுக்க மறு குடியேற்றம்: ஈஸ்வர் கன்ட்ரே வனப்பகுதிக்குள் வசிக்கும் மக்களை காலி செய்ய அமைச்சர் யோசனை

மைசூரு: ''வனப்பகுதிக்குள் வசிக்கும் மக்களை, வேறு இடங்களுக்கு இடம் மாற்றி குடியேற்றி, அவர்களுக்கு இழப்பீடு வழங்குவது குறித்து முதல்வருடன் விரைவில் ஆலோசிப்பேன்,'' என, வனத்துறை அமைச்சர் ஈஸ்வர் கன்ட்ரே தெரிவித்தார். கர்நாடகாவின் வனப்பகுதி அருகில் மனித - விலங்கு மோதல்கள் அதிகரித்து வருகின்றன. கடந்த ஒரு மாதத்தில் மைசூரில் மட்டும் புலி தாக்கியதில் மூன்று விவசாயிகள் உயிரிழந்தனர், ஒரு விவசாயி பார்வையை இழந்தார். இதையடுத்து, மறு உத்தரவு வரும் வரை, பண்டிப்பூர் தேசிய பூங்கா, நாகரஹொளே புலிகள் வனப்பகுதியில் சபாரிக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், பெங்களூரு விகாஸ் சவுதாவில் அமைச்சர் ஈஸ்வர் கன்ட்ரேயை, காங்கிரஸ் எம்.எல்.ஏ., ராஜே கவுடா தலைமையில் பிரதிநிதிகள் சந்தித்து மனுக் கொடுத்தனர். அதில், 'குத்ரேமுக் தேசிய பூங்காவின் கார்காலா பகுதியில் வசிப்பவர்களை வேறு இடத்தில் குடியமர்த்த வேண்டும்' என, வேண்டுகோள் விடுத்தனர். மனுவை ஏற்றுக் கொண்ட அமைச்சர் ஈஸ்வர் கன்ட்ரே, நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார். பின், ஈஸ்வர் கன்ட்ரே கூறியதாவது: கடந்த காலங்களில், வன விலங்குகளை வேட்டையாடுவது அதிகம் இருந்தது. இதை கட்டுப்படுத்த துறை சார்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும், சிறப்பான சுற்றுச்சூழல் காரணமாக, வனவிலங்குகளின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. அதிகரித்து வரும் வனவிலங்குகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப, வனப்பகுதி விரிவடையவில்லை. இது பிரச்னையை மோசமாக்கி வருகிறது. கடந்த 1972ல் பண்டிப்பூரில் 12ஆக இருந்த புலிகள் எண்ணிக்கை, இன்று 170க்கும் அதிகமாக அதிகரித்துள்ளது. எனவே, உடல் பலவீனம் அடைந்த புலிகள் வனப்பகுதியில் விலங்குகளை வேட்டையாட முடியாத காரணத்தால், அங்கிருந்து வெளியேறி, கால்நடைகள், பொது மக்களை தாக்கி வருகின்றன. இதைத் தடுக்க வனத்துறையினர் பல நடவடிக்கைகள் மேற்கொண்டும் பலனில்லை. இந்த சூழலில், பல்வேறு துறைகளுடன் ஒருங்கிணைப்பை அதிகரிக்க, முதல்வர் தலைமையில் விரைவில் கூட்டம் நடத்தப்படும். இதில், வனப்பகுதிக்குள் வசிக்கும் மக்களை இடமாற்றம் செய்வதன் மூலம், அவர்களும், அவர்களின் குழந்தைகளும், சமூகத்துடன் இணைவர். கூடுதலாக மனித - வன விலங்கு மோதல் குறையும். இடம் மாற்றத்துக்கு இழப்பீடு வழங்கப்படும். ஒரே நேரத்தில் அனைத்தையும் செய்ய முடியாது. படிப்படியாக செயல்படுத்தப்படும். இதற்காக பட்ஜெட்டில் பணம் ஒதுக்கப்பட்டால், இது சாத்தியமாகும். இது குறித்து முதல்வருடன் விவாதிக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ