மெட்ரோ ரயில் டிக்கெட்டை தொடர்ந்து மின் கட்டணமும் உயர்கிறது ?
முதல்வர் சித்தராமையா, 2026 - 27ம் நிதியாண்டுக்கான பட்ஜெட் தாக்கலுக்கு தயாராகி வருகிறார். துறை வாரியாக அமைச்சர்கள், அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி வருகிறார். பட்ஜெட் தாக்கலுக்கு முன்பே, அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்ந்துள்ளது. இந்த விலை உயர்வால், மக்கள் பரிதவிக்கும் நிலையில், மெட்ரோ ரயில் கட்டணம் சமீபத்தில் உயர்த்தப்பட்டது. அந்த கட்டண உயர்வு வரும், 9ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது. இந்நிலையில், குடிநீர் கட்டணத்தை அதிகரிக்க, மாநில குடிநீர் வாரியம் தயாராகி வருகிறது. அதேபோல, மின் கட்டணத்தை உயர்த்த, கர்நாடகா மின் கட்டுப்பாடு ஆணையம் ஆலோசித்து வருகிறது. கர்நாடகாவின் பெரும்பாலான மின் வினியோக நிறுவனங்கள் நஷ்டத்தில் இயங்குகின்றன. வருவாயை அதிகரிப்பதன் மூலம், நஷ்டத்தை சமாளிக்க அரசு முடிவு செய்துள்ளது. யூனிட்டுக்கு ஒரு ரூபாய் உயர்த்தும்படி, பெஸ்காம் எனும், பெங்களூரு மின் வினியோக நிறுவனம் உட்பட, மற்ற நிறுவனங்கள் மின் கட்டுப்பாட்டு ஆணையத்திடம் வேண்டுகோள் விடுத்துள்ளன. அதனால், ஏப்., 1 முதல் கட்டண உயர்வு அமலுக்கு வரலாம் என, எதிர்பார்க்கப்படுகிறது. இதுகுறித்து, பெஸ்காம் அதிகாரிகள் கூறியதாவது: கடந்த, 2025 மார்ச்சில், கர்நாடக மின் கட்டுப்பாடு ஆணையம், யூனிட்டுக்கு, 36 பைசா அளவுக்கு மின் கட்டணத்தை உயர்த்தியது. மின் வினியோக நிறுவனங்களுக்கு, வருவாயை விட செலவு அதிகரித்துள்ளது. மின்சாரம் வாங்குவது, மின் திட்டங்களுக்கு பெறப்பட்ட கடனுக்கு வட்டி கட்டுவது உட்பட மற்ற தேவைகளுக்கு, கே.இ.ஆர்.சி., எனும் கர்நாடக மின் கட்டுப்பாட்டு ஆணையம் நிர்ணயித்த தொகையை விட அதிகம் செலவாகிறது. குறிப்பாக பெஸ்காமுக்கு நஷ்டம் அதிகம். 2,802.82 கோடி ரூபாய் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. மற்ற நிறுவனங்கள், 2,000 கோடி ரூபாய் நஷ்டத்தை சந்தித்துள்ளன. இத்தகைய சூழ்நிலையில் மின் கட்டணத்தை உயர்த்தாவிட்டால், மின் வினியோக நிறுவனங்களை நிர்வகிப்பது கஷ்டம் என, கே.இ.ஆர்.சி.,க்கு அறிக்கை அளித்துள்ளோம். எங்களின் கோரிக்கை ஏற்கப்படும் என, நம்புகிறோம். தொழிற்சாலைகள், வர்த்தக நிறுவனங்களுக்கு நிர்ணயித்துள்ள மின்கட்டணத்தை உயர்த்தி, விவசாயிகளின் பம்ப்செட்களுக்கு நிர்ணயித்துள்ள கட்டணத்தை, குறைக்க வேண்டும் என, எஸ்காம்கள் வேண்டுகோள் விடுத்துள்ளன. மக்களின் கருத்துக்களை கேட்டறிந்த பின், மின் கட்டண உயர்வு குறித்து, கே.இ.ஆர்.சி., முடிவு செய்யும். இவ்வாறு அவர்கள் கூறினர்.
பின்னடைவை ஏற்படுத்தும்
மின்சார கட்டணத்தை உயர்த்த வேண்டும் என, மின் விநியோக நிறுவனங்கள் வேண்டுகோள் விடுத்துள்ளன. ஏப்ரல், மே மாதம் ஜி.பி.ஏ., எனும் கிரேட்டர் பெங்களூரு ஆணையம் உட்பட, கர்நாடகாவின் பல்வேறு உள்ளாட்சிகளுக்கு தேர்தல் நடத்த, மாநில தேர்தல் ஆணையம் தயாராகி வருகிறது. இந்நிலையில், மின் கட்டணத்தை உயர்த்தினால், மக்களின் அதிருப்திக்கு ஆளாக நேரிடும். இது, ஆளுங்கட்சியான காங்கிரசுக்கு, பின்னடைவை ஏற்படுத்தலாம் என்றும், அரசு அஞ்சுகிறது. எனவே மின் கட்டண உயர்வை அரசு தள்ளி வைக்கவும் வாய்ப்பு உள்ளது.