பொது இடத்தில் குப்பை வீசியவருக்கு ரூ.1,000 அபராதம்
பெங்களூரு: பொது சாலையில், குப்பையை கொட்டிய இளைஞருக்கு, பெங்களூரு மாநகராட்சி 1,000 ரூபாய் அபராதம் விதித்துள்ளது. சாலைகளில் குப்பை கொட்டுவதை தடுக்க, பெங்களூரு மாநகராட்சி பல நடவடிக்கைகள் எடுத்துள்ளது. ஆனால் பொது மக்கள் சாலையோரங்கள், காலி வீட்டுமனை, மழைநீர் கால்வாய்கள் என தாங்கள் நினைத்த இடங்களில் எல்லாம் குப்பையை கொட்டுகின்றனர். இத்தகையவர்களுக்கு மாநகராட்சி அபராதம் விதிக்கிறது. நகரின் சாலை ஒன்றில், சில நாட்களுக்கு முன் இளைஞர் ஒருவர், பெரிய கவரில் குப்பையை நிரப்பி, வீட்டு முன் சாலையோரத்தில் போட்டுச் சென்றார். குப்பை அள்ள வந்த துப்புரவு தொழிலாளர்கள், இது குறித்து, அதிகாரிகளின் கவனத்துக்கு கொண்டு சென்றனர். அதை போட்டது யார் என்பதை கண்டுபிடித்து, அபராதம் விதிக்கும் முயற்சியில் இறங்கினர். குப்பை போடப்பட்ட இடத்தில், கண்காணிப்பு கேமராவும் இருக்கவில்லை. அதன்பின் குப்பை கவரில், ஒரு பெண்ணின் பெயர், முகவரி, மொபைல் போன் எண் உள்ள பார்சல் கவர் இருப்பதை கவனித்தனர். அந்த எண்ணில் தொடர்பு கொண்டு விசாரித்தபோது, அப்பெண் குப்பையை போட்ட இளைஞரின் தோழி என்பது தெரிந்தது. பெண்ணிடம் தகவல் பெற்றுக் கொண்டனர். நேற்று முன்தினம், இளைஞரின் வீட்டுக்கு சென்ற அதிகாரிகள், குப்பை போட்டதற்கு 1,000 ரூபாய் அபராதம் வசூலித்தனர். இனி இதுபோன்று, சாலையில் குப்பை போடக்கூடாது என, எச்சரித்தனர். அந்த இளைஞர் தனக்கு ஏற்பட்ட அனுபவத்தை, சமூக வலைதளத்தில் விவரித்துள்ளார்.