ஏ.டி.எம்.,மில் ரூ.18 லட்சம் திருட்டு: இருவர் சுட்டுப்பிடிப்பு
கலபுரகி : கலபுரகியில் ஏ.டி.எம்.,மில் 18 லட்சம் ரூபாய் திருடிய வழக்கின் முக்கிய குற்றவாளிகளை, போலீசார் துப்பாக்கியால் சுட்டுப்பிடித்தனர்.கலபுரகி டவுன் ராம்நகரில் எஸ்.பி.ஐ., வங்கிக்கு சொந்தமான ஏ.டி.எம்., மையம் உள்ளது. கடந்த 9ம் தேதி ஏ.டி.எம்., இயந்திரத்தை காஸ் கட்டரால் வெட்டி 18 லட்சம் ரூபாயை மர்ம நபர்கள் திருடிச் சென்றனர். இதுபற்றி கலபுரகி டவுன் போலீசார் விசாரித்தனர்.ஏ.டி.எம்.,மில் திருட வந்தவர்கள் பயன்படுத்திய சிவப்பு நிற கார் ஒன்று, கலபுரகி ரூரல் பேலுார் கிராஸ் தொழிற்பேட்டை பகுதியில் நிற்பது பற்றி, கலபுரகி ரூரல் இன்ஸ்பெக்டர் சந்தோஷுக்கு நேற்று அதிகாலை 3:00 மணிக்கு தகவல் கிடைத்தது.இதையடுத்து இன்ஸ்பெக்டர் சந்தோஷ், எஸ்.ஐ., பசவராஜ், போலீஸ்காரர்கள் மஞ்சு, பெரோஸ், ராஜ்குமார் ஆகியோர் தொழிற்பேட்டை பகுதிக்கு சென்றனர். காரில் சுற்றிய இருவரை சுற்றி வளைத்து பிடித்தனர்.விசாரணையில் ஏ.டி.எம்.,மில் திருடியதை ஒப்புக் கொண்டனர். அவர்களை போலீஸ் ஜீப்பில் ஏற்ற முயன்றபோது, போலீஸ்காரர்கள் மூன்று பேரையும் தாக்கியதுடன், கத்தியால் குத்திவிட்டு தப்பினர்.அதிர்ச்சி அடைந்த இன்ஸ்பெக்டர் சந்தோஷ், எஸ்.ஐ., பசவராஜ் ஆகியோர் துப்பாக்கியால் வானத்தை நோக்கி, ஒரு ரவுண்டு சுட்டு சரண் அடையும்படி எச்சரித்தனர். இருவரும் கேட்கவில்லை. இதனால் இருவரின் வலது கால்களிலும் துப்பாக்கியால் சுட்டனர். சுருண்டு விழுந்த இருவரும் கைது செய்யப்பட்டனர்.அவர்களும், தாக்குதலில் காயம் அடைந்த போலீஸ்காரர்களும், தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். போலீஸ்காரர்களிடம், கலபுரகி போலீஸ் கமிஷனர் சரணப்பா நலம் விசாரித்தார்.