உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு /  ரூ.3,688 கோடி!: கர்நாடகாவின் பணம் கொழிக்கும் கலால் துறை

 ரூ.3,688 கோடி!: கர்நாடகாவின் பணம் கொழிக்கும் கலால் துறை

கர்நாடகாவின் கலால் துறை, பணம் கொழிக்கும் துறைகளில் ஒன்றாகும். எந்த துறையில் வருவாய் குறைந்தாலும், கலால் துறைக்கு வருவாய் குறைந்தது இல்லை. கொரோனா பெருந்தொற்று பரவிய போது, வருவாய் துறை, வர்த்தக வரித்துறை, ஹிந்து அறநிலையத்துறை, பொதுப்பணித்துறை என, அனைத்து துறைகளும் வருவாய் இல்லாமல், பொருளாதார நெருக்கடியில் சிக்கி திணறின. ஆனால், கலால்துறை நிர்ணயித்த இலக்கை தாண்டி, வருவாய் ஈட்டியது. அரசுக்கு கை கொடுத்து உதவியது. பொருளாதார வளர்ச்சியில், இந்த துறை முக்கிய பங்கு வகிக்கிறது. இதே காரணத்தால் ஆண்டு தோறும் பட்ஜெட்டில் துறையின் வருவாய் இலக்கை, அரசு உயர்த்துகிறது. நிர்ணயிக்கப்பட்ட இலக்கை, இந்த துறை எட்டுகிறது. மதுபானம் விற்பனை அதிகரிப்பதே, வருவாய் அதிகரிக்க காரணம். வாக்குறுதி திட்டங்களுக்கு நிதி புரட்டும் நோக்கில், மதுபான விற்பனை வரியை அரசு உயர்த்தியது. இதற்கு மதுபான விற்பனையாளர்கள், கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். விற்பனை குறையும் என கூறி, வரியை குறைக்கும்படி அரசிடம் வேண்டுகோள் விடுத்தனர். ஆனால், விலை உயர்வுக்கு இடையிலும், மதுபான விற்பனை தொடர்ந்து அதிகரிக்கிறதே தவிர, குறையவில்லை. ஏப்ரல் மாதம் மட்டுமே அரசு கருவூலத்துக்கு, 3,688 கோடி ரூபாய் வருவாய் வந்துள்ளது குறிப்பிடத்தக்கது. வாக்குறுதி திட்டங்களுக்கு ஆண்டு தோறும் 60,000 கோடி ரூபாய்க்கும் அதிகமான நிதி தேவைப்படுகிறது. எனவே மதுபான விற்பனையை அதிகரித்து, வருவாய் கொண்டு வரும்படி அதிகாரிகளுக்கு அரசு நெருக்கடி கொடுப்பதாக, இதற்கு முன் குற்றச்சாட்டு எழுந்தது. இதை கண்டித்த எதிர்க்கட்சிகள், 'மாநில அரசு, மக்களை குடிகாரர்களாக்கி, தன் கருவூலத்தை நிரப்புகிறது. அரசின் அழுத்தத்தால் அதிகாரிகள், அதிகமான மதுபானம் விற்கும்படி, மதுபான கடைகள், பார்களுக்கு நெருக்கடி கொடுக்கின்றனர்' என கண்டித்தன. அதிகாரிகள் கருத்து வருவாயில் சாதனை குறித்து, கலால் துறை அதிகாரிகள் கூறியதாவது: மாநிலத்தில் மதுபானம் விற்பனை, தொடர்ந்து ஏறுமுகமாக உள்ளது. ஏப்ரல் மாதம் மட்டுமே விஸ்கி, ரம், பிராந்தி, ஜின், உட்பட, 68.17 லட்சம் பாக்ஸ் மதுபானம் விற்பனையாகியுள்ளது. ஒரு பாக்சில் 8.64 லிட்டர் மதுபானம் இருக்கும். 50.39 லட்சம் பாக்ஸ் பீர் விற்பனையாகியுள்ளது. ஒரு பாக்சில், 7.8-0 லிட்டர் பீர் இருக்கும். இதையும் சேர்த்தால், 118.56 லட்சம் பாக்ஸ் மதுபானம் விற்பனையாகியுள்ளது. கடந்த 13 ஆண்டுகளில், இந்த அளவுக்கு மதுபானம் விற்பனை ஆனது இல்லை. 2025ன் ஏப்ரலில் 57.44 லட்சம் பாக்ஸ் மதுபானம் விற்பனையானது. 2,904 கோடி ரூபாய் வருவாய் கிடைத்தது. இது பெரிய சாதனையா க இருந்தது. கடந்தாண்டுடன் ஒப்பிட்டால், மதுபான விற்பனை 21.13 சதவீதம் அதிகரித்துள்ளது. ஏப்ரலில் 68.17 லட்சம் பாக்ஸ் மதுபானம் விற்பனையானதில், 3,688 கோடி ரூபாய் வருவாய் கிடைத்தது. கர்நாடகாவை ஒட்டியுள்ள தமிழகம், கேரளாவில் ஏப்ரல்ல் சட்டசபை தேர்தல் நடந்தது. இதன் பயனாக கர்நாடகாவில் மதுபானம் விற்பனை அதிகரித்திருக்கலாம். அம்மாநிலங்களில் ஓட்டுப்பதிவுக்கு முன், மதுபான விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டது. இடைத்தேர்தல் காரணம்? எனவே மதுபான பிரியர்கள் கேரளா, தமிழகத்தை ஒட்டியுள்ள கர்நாடக மாவட்டங்களில், மதுபானம் வாங்கியிருக்கலாம். கர்நாடகாவின் தாவணகெரே தெற்கு மற்றும் பாகல்கோட் தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடந்தது. இதுவும் மதுபான விற்பனை அதிகரிப்புக்கு காரணமாக இருக்கும். இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை