உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு /  குளிர்பதன கிடங்கில் வைத்திருந்த ரூ.50 லட்சம் மிளகாய் அபேஸ்

 குளிர்பதன கிடங்கில் வைத்திருந்த ரூ.50 லட்சம் மிளகாய் அபேஸ்

ஹாவேரி: உலக பிரசித்தி பெற்ற, பேடகி மிளகாய் மார்க்கெட்டில் மோசடி நடந்துள்ளது. குளிர்பதன கிடங்கில் வைத்திருந்த 50 லட்சம் ரூபாய் மதிப்புள்ள மிளகாய், விவசாயிக்கு தெரியாமல் விற்கப்பட்டுள்ளது. ஹாவேரி மாவட்டம், பேடகி தாலுகாவில் உற்பத்தியாகும் மிளகாய் பிரசித்தி பெற்றதாகும். இங்குள்ள காய்ந்த மிளகாய் மார்க்கெட், மிகவும் பெரிதானது. இந்த மார்க்கெட்டில் விவசாயிகளின் வசதிக்காக, குளிர்பதன கிடங்கு அமைக்கப்பட்டுள்ளது. தங்களின் விளைச்சலுக்கு சரியான விலை கிடைக்காத போது, விவசாயிகள் குளிர்பதன கிடங்கில் வைத்திருப்பர். விலை அதிகமாகும் போது விற்பர். ஹாவேரி மட்டுமின்றி, பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், மிளகாய் விவசாயிகளுக்கு இந்த குளிர்பதன கிடங்கு மிகவும் உதவியாக உள்ளது. பல்லாரி மாவட்டம், சிரகுப்பா தாலுகாவை சேர்ந்த விவசாயி மஹாதேவப்பா, 58, விளைவித்த மிளகாய்க்கு நியாயமான விலை கிடைக்கவில்லை. எனவே இடைத்தரகர் நாகப்பா ஹடகலி என்பவரின் உதவியுடன், 2023ல் 363 மூட்டை மிளகாய்களை பாதுகாக்கும் நோக்கில், பேடகியின் குளிர்பதன கிடங்கில் வைத்திருந்தார். சமீபத்தில் மார்க்கெட்டில், மிளகாய்க்கு நல்ல விலை கிடைத்தால், விற்பனை செய்வதற்கு மிளகாயை கொண்டு செல்ல, பேடகிக்கு விவசாயி வந்திருந்தார். ஆனால் குளிர்பதன கிடங்கில் அவர் வைத்திருந்த மிளகாய்களை காணவில்லை. அவருக்கு தெரியாமல் குளிர்பதன கிடங்கு நிர்வகிப்பாளர், விவசாயியின் அனுமதி இல்லாமல் மிளகாய்களை விற்றுள்ளதாக, குற்றச்சாட்டு எழுந்துள்ளது. மிளகாய்களின் மதிப்பு 50 லட்சம் ரூபாயாகும். மிளகாய்கள் பறிபோனதால், மனம் நொந்த விவசாயி நியாயம் கேட்டு, பேடகி போலீஸ் நிலையத்தில், நேற்று முன் தினம் புகார் செய்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை