உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு / ஆன்லைன் வேலை பெயரில் ரூ.67 லட்சம் நுாதன மோசடி

ஆன்லைன் வேலை பெயரில் ரூ.67 லட்சம் நுாதன மோசடி

பெங்களூரு : ஆன்லைனில் பகுதி நேர வேலை என்று கூறி, ஒருவரிடம், 67 லட்சம் ரூபாய் மோசடி நடந்துள்ளது. பெங்களூரு, விஜயநகரில் வசித்து வருபவர் சதீஷ், 47. தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். இவருக்கு கடந்த ஜனவரி 11ம் தேதி, டெலிகிராம் செயலியில் ஒரு மெசேஜ் வந்தது. பகுதி நேர வேலை செய்து சம்பாதிக்கலாம் என, அதில் குறிப்பிடப்பட்டு இருந்தது. இதை நம்பிய சதீஷ், வேலையில் சேருவதற்கு விருப்பம் தெரிவித்தார். பின், 'அமேசான் நிறுவனத்தின் பகுதி நேர வேலை' என்ற பெயரிடப்பட்ட குழுவில் இணைக்கப்பட்டார். இந்த குழுவில் பலரும் தாங்கள் சம்பாதித்த பணம் என கூறி வங்கிக்கணக்கு விவரங்கள் தொடர்பான புகைப்படங்களை பதிவிட்டனர். இதை சதீஷ் முழுமையாக நம்பி, அவரும் அந்த குழுவில் வழங்கப்பட்ட ஆன்லைன் வேலைகளை செய்து வந்தார். இதனிடையே பணம் முதலீடு செய்தால் 65 சதவீதம் லாபம் கிடைக்கும் என, சதீஷிடம் கூறப்பட்டது. அவரும் 1,000 ரூபாயை முதலீடு செய்தார். 1,650 ரூபாயாக திரும்ப கிடைத்தது. இதையடுத்து, ஜனவரி முதல் கடந்த ஆகஸ்ட் வரை, தன் மூன்று வங்கிக் கணக்குகளில் இருந்து 67 லட்சம் ரூபாய் முதலீடு செய்தார். இதன் மூலம் கோடிக்கணக்கான ரூபாய் லாபம் ஈட்டியதாக அவரிடம் தெரிவிக்கப்பட்டது. இந்த பணத்தை இம்மாதம் எடுக்க முயற்சித்தார். அப்போது, அவரால் எடுக்க முடியாமல் போனது. இதுகுறித்து அந்நபர்களிடம் கேட்டபோது, மேலும் பணத்தை முதலீடு செய்யும்படி கூறியுள்ளனர். இதனால் சதீஷ் சந்தேகமடைந்தார். இதுகுறித்து, தன் நண்பர்களிடம் கூறினார். இது சைபர் மோசடியாக இருக்கலாம் என, அவரது நண்பர்கள் எச்சரித்தனர். இதைடுத்து, சதீஷ் கடந்த ஞாயிற்றுக் கிழமை பெங்களூரு மேற்கு மண்டல சைபர் கிரைம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். போலீசார் சைபர் மோசடி என்பதை உறுதி செய்தனர். பணம் அனுப்பப்பட்ட வங்கிக் கணக்குகளை வைத்து விசாரணையை துவங்கி உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை