கைதிகளின் அன்றாட உணவுக்கு ரூ.85
பெங்களூரு: கர்நாடக சிறைகளில் கைதிகளுக்கு அளிக்கப்படும் உணவுக்கு, வெறும் 85 ரூபாய் செலவிடும் மாநில அரசின் செயல்பாடு குறித்து மனித உரிமைகள் ஆணையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.கர்நாடக சிறைகளில் உள்ள கைதிகளின் உணவுக்கு, தினமும் எவ்வளவு செலவிடப்படுகிறது என்பதை பற்றி, சமூக ஆர்வலர் நரசிம்ம மூர்த்தி, தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ், சிறைத்துறையிடம் தகவல் பெற்று பகிரங்கப்படுத்தியுள்ளார்.கைதிகளின் அன்றாட உணவுக்கு, வெறும் 85 ரூபாய் செலவிடப்படுவது தெரிய வந்துள்ளது.கைதிகளுக்கு காலை 7:15 முதல் 8:30 மணிக்குள் சிற்றுண்டி, 11:00 மணி முதல் 11:30 மணிக்குள் மதிய உணவு, மாலை 5:15 மணி முதல் 5:45 மணி வரை, இரவு உணவுக்கு நேரம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.மாலை 5:45 மணிக்கு பின், கைதிகளுக்கு உணவு எதுவும் வழங்கப்படுவதில்லை. மறுநாள் காலை தான் சிற்றுண்டி வழங்கப்படும்.கைதிகள் தொடர்ந்து 14 மணி நேரம், உணவின்றி இருப்பதை பலரும் ஆட்சேபித்துள்ளனர். கைதிகளின் உணவுக்கான தொகையை அதிகரிக்க வேண்டும் என, வலியுறுத்தியுள்ளனர்.இதுகுறித்து, மனித உரிமை ஆணையத்தில் சமூக ஆர்வலர் நரசிம்ம மூர்த்தி புகார் அளித்துள்ளார். 'கைதிகளும் மனிதர்கள் தான். அவர்களுக்கும் தரமான உணவு வழங்கும்படி, சிறைத்துறைக்கு உத்தரவிட வேண்டும்' என, அவர் கோரியுள்ளார்.