விவசாயத்தில் வித்தை காட்டும் சங்கீதா
- நமது நிருபர் -: விவசாயம் என்றாலே கடினமான தொழில். அதில், நிறைய சவால்களை எதிர் கொள்ள வேண்டி இருக்கும். லாபம் கிடைப்பது எளிதானதல்ல. கடன் வாங்கி விவசாயம் செய்து நஷ்டம் அடைந்ததால், தற்கொலை செய்து கொள்ளும் சம்பவங்களும் அரங்கேறுகின்றன. இந்தியாவில் அதிக அளவு விவசாயிகள் தற்கொலை செய்து கொள்ளும் மாநிலங்களில், கர்நாடகா 2வது இடத்தில் உள்ளது என்பது கசப்பான உண்மையே. இப்படிப்பட்ட சவால்கள் நிறைந்த விவசாயத்தில் ஒரு பெண்ணாக இருந்து, லாபம் ஈட்டி வரும் சங்கீதாவை பற்றியதே இக்கட்டுரை. பெலகாவி மாவட்டம், ககாவாட் தாலுகா ஐனாபூர் கிராமத்தை சேர்ந்தவர் சங்கீதா, 39. இவர் தனக்கு சொந்தமான 15 ஏக்கர் நிலத்தில் விவசாயம் செய்து வருகிறார். இவர், தன் நிலத்தில் கரும்பை அதிக அளவில் பயிர் செய்துள்ளார். அதே சமயம், மீதமுள்ள நிலத்தில் கொண்டைக்கடலை, கேரட் போன்ற காய்கறிகளை பயிரிட்டு வருகிறார். கணவர் துணை அதாவது, ஒரே நேரத்தில் பல பயிர்களை பயிரிட்டு, அறுவடை செய்து லாபம் ஈட்டி வருகிறார். பெரும்பாலானோர் ஒரு சமயத்தில், ஒரு பயிரை மட்டுமே பயிரிடுவர். ஆனால், இவரோ ஒரு சமயத்தில் பல வகையான பயிர்களை பயிரிடுகிறார். இதனால், எப்போதும் வேலை இருந்து கொண்டே இருக்கும். ஒரு பக்கம் பயிருக்கு தண்ணீர் பாய்ச்சுவது, மறுபுறம் அறுவடை என வேலை மும்முரமாக நடந்து கொண்டு இருக்கும். இவர், காலையில் வயலுக்கு போனால் மீண்டும் மாலை தான் திரும்புவார். இவரது நிலத்தில் வேலை பார்க்க கூலிக்கு ஆட்கள் வருகின்றனர். இருப்பினும், இவரும் தொடர்ச்சியாக வேலை செய்கிறார். சங்கீதாவுக்கு உறுதுணையாக அவரது கணவர் சிவானந்த் மல்கரும் விவசாய பணியில் ஈடுபடுகிறார். லட்சத்தில் வருமானம் இவரது நிலத்தில் பயிரிடும் கொண்டைக்கடலைக்கு நல்ல சந்தை விலை கிடைக்கிறது. இவை முப்பது நாட்களில் அறுவடைக்கு தயாராகி விடுகின்றன. சந்தையில் ஒரு கிலோவுக்கு 50 முதல் 55 ரூபாய் வரை கிடைக்கிறது. இதன் மூலம், ஆண்டுக்கு 4 முதல் 5 லட்சம் ரூபாய் வருமானம் கிடைக்கிறது. அதுபோல, ஒரு ஏக்கர் நிலத்தில் பயிரிட்ட கொத்துமல்லி 1.75 லட்சம் ரூபாய் லாபம் ஈட்டி தந்தது. அதுபோல, கேரட், கத்திரி, தக்காளி போன்ற காய்கறிகளை பயிரிட்டு சந்தைக்கு எடுத்து செல்கிறார். கரும்பை முக்கிய பயிராக பயிரிட்டு உள்ளனர். இந்த ஆண்டு கரும்பு அறுவடை மூலம் 15 முதல் 18 லட்சம் ரூபாய் வருவாய் ஈட்டலாம் என சங்கீதா எதிர்பார்க்கிறார்.