சவுஜன்யா மாமா விட்டலிடம் வனப்பகுதியில் விசாரணை
மங்களூரு : தர்மஸ்தலா வழக்கில் மண்டை ஓடு எடுக்கப்பட்ட விவகாரத்தில், கல்லுாரி மாணவி சவுஜன்யாவின் மாமா விட்டல் கவுடாவை, பங்களாகுட்டா வனப்பகுதிக்கு அழைத்து சென்று, எஸ்.ஐ.டி., அதிகாரிகள் விசாரித்தனர். தட்சிண கன்னடாவின் தர்மஸ்தலா வழக்கில் பொய் புகார் அளித்த சின்னையா, ஷிவமொக்கா சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில், அவரை பொய் புகார் அளிக்கும்படி துாண்டிவிட்ட, சமூக ஆர்வலர்கள் கிரிஷ் மட்டன்னவர், ஜெயந்த், யு - டியூபர்கள் அபிஷேக், முனாப்பிடம் எஸ்.ஐ.டி., அதிகாரிகள் விசாரிக்கின்றனர். சின்னையா நீதிமன்றத்தில் கொடுத்த மண்டை ஓடு பற்றி விசாரித்த போது, கடந்த 2012ல் தர்மஸ்தலாவில் பலாத்காரம் செய்து கொல்லப்பட்ட, கல்லுாரி மாணவி சவுஜன்யாவின் மாமா விட்டல் கவுடா, சின்னையாவிடம் மண்டை ஓடு கொடுத்தது தெரிந்தது. அவரிடம், எஸ்.ஐ.டி., விசாரித்தது. தர்மஸ்தலா நேத்ராவதி ஆற்றங்கரை எதிரே உள்ள, பங்களாகுட்டா வனப்பகுதியில் இருந்து, மண்டை ஓட்டை எடுத்து வந்ததை ஒப்பு கொண்டார். நேற்று மாலை அவரை பங்களாகுட்டா வனப்பகுதிக்கு அழைத்து சென்று, எஸ்.ஐ.டி., அதிகாரிகள் விசாரித்தனர். மண்டை ஓடு எடுத்த இடத்தை அடையாளம் காட்டினார். அந்த இடத்தில் வேறு ஏதாவது சிக்குகிறதா என்றும் சோதனை நடத்தப்பட்டது. அதற்குள் மாலை 6:00 மணி ஆகிவிட்டதால் விட்டல் கவுடாவை அழைத்து கொண்டு, அதிகாரிகள் புறப்பட்டு சென்றனர். இதற்கிடையில், பெல்தங்கடி எஸ்.ஐ.டி., அலுவலகத்திற்கு தர்மஸ்தலாவை சேர்ந்த கணேஷ், அவரது சகோதரி பாரதி ஆகியோர் நேற்று மதியம் வந்தனர். 'கடந்த 2012ல் எனது தந்தையும், யானை பாகனுமான நாராயணா, எனது அத்தை யமுனா கொலை செய்யப்பட்டனர். இந்த கொலையில் தர்மஸ்தலாவை சேர்ந்த முக்கிய பிரமுகர்களுக்கு தொடர்பு உள்ளது. இதுபற்றி விசாரிக்க வேண்டும்' என்று, எஸ்.ஐ.டி., அதிகாரிகளிடம் மனு கொடுத்து விட்டு சென்றனர்.