தண்ணீரில் விஷம் கலப்பு பள்ளி மாணவர்கள் மயக்கம்
பெலகாவி: அரசு பள்ளி மாணவர்களும் சுற்றுப்புற வீடுகளில் வசிக்கும் மக்களும் பயன்படுத்தும் குடிநீர் தொட்டியில் யாரோ பூச்சிகொல்லி மருந்து கலந்தது, பெரும் பீதியை ஏற்படுத்தியுள்ளது. தண்ணீரை குடித்ததால் 12 மாணவர்களுக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டது.பெலகாவி சவதட்டி தாலுகா, ஹுலிகட்டி கிராமத்தில் உள்ள அரசு துவக்கப் பள்ளியில் 41 மாணவர்கள் படிக்கின்றனர். பள்ளி வளாகத்தில் குடிநீர் தொட்டி உள்ளது. இந்த தண்ணீரையே மாணவர்கள் குடிப்பதற்கு பயன்படுத்தி வருகின்றனர். இந்த தண்ணீரையே, பள்ளியை சுற்றியுள்ள 20க்கும் மேற்பட்ட வீடுகளிலும், பயன்படுத்துகின்றனர்.அப்படி இருக்கையில், நேற்று குடிநீர் தொட்டியில் இருந்த தண்ணீரை குடித்த மாணவர்களுக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டது. கடுமையாக பாதிக்கப்பட்ட 12 மாணவர்கள் உடனடியாக அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதையறிந்த மாணவர்களின் பெற்றோர், கிராமத்தினர் பள்ளி வளாகத்திற்கு வந்து ஆசிரியர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால், அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.இதுகுறித்து அறிந்த சுகாதாரத்துறை அதிகாரிகள் பள்ளிக்கு வந்து சோதனையிட்டனர். அப்போது, குடிநீர் தொட்டியில் பூச்சிகொல்லி மருந்து கலக்கப்பட்டது தெரிந்தது. அதிர்ஷ்டவசமாக தொட்டியில் தண்ணீரின் அளவு அதிகமாக இருந்ததாலும், வீரியம் குறைந்த பூச்சிகொல்லி மருந்து கலக்கப்பட்டதாலும் பெரிய அளவில் பாதிப்பு ஏற்படவில்லை என்றனர்.அதே சமயம், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மாணவர்களின் உடல்நிலை சீராக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தண்ணீர் தொட்டியில் பூச்சிகொல்லி மருந்து கலந்தது யார் என்பது குறித்து பெலகாவி ரூரல் போலீஸ் விசாரிக்கின்றனர்.