உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு / மத்திய அரசுடன் கைகோர்க்க சிவகுமார் விருப்பம் கர்நாடகா வளர்ச்சி பணிகளில் ஆர்வம்

மத்திய அரசுடன் கைகோர்க்க சிவகுமார் விருப்பம் கர்நாடகா வளர்ச்சி பணிகளில் ஆர்வம்

பெங்களூரு: ''கர்நாடகாவில் வளர்ச்சி பணிகள் நடக்க வேண்டுமென்றால், மத்திய அரசுடன், கைகோர்த்தால் மட்டுமே எந்த வேலை யையும் திறம்பட செய்ய முடியும்,'' என்று, துணை முதல்வர் சிவகுமார் கூறி உள்ளார். 'பெங்களூரு நடைப்பயணம்' திட்டத்தின் கீழ், பி.டி.எம்., லே - அவுட் தொகுதிக்கு உட்பட்ட கோரமங்களா வீர யோதா பூங்காவில், மக்கள் குறைகேட்பு கூட்டத்தை, துணை முதல்வர் சிவகுமார் நேற்று நடத்தினார். மக்களிடம் குறைகள் கேட்டறிந்து, மனுக்களை பெற்று கொண்டார். பின், அவர் பேசியதாவது: அனைவருக்கும் வாழ்வு கொடுக்கும் பெங்களூரு நகரில் நாம் வாழ்கிறோம். பெங்களூரு வந்து வளர்ந்தவர்கள், இப்போது நல்ல நிலையில் உள்ளனர். ஆனால் அவர்கள் அதை மறந்து விட்டு, 'எக்ஸ்' பக்கத்தில் பதிவுகளை வெளியிடுகின்றனர். நமது வேர்களை மறந்து விட்டால், நம்மால் வெற்றி பெற முடியாது. சாலை பள்ளங்களை புகைப்படம் எடுத்து, செயலி மூலம் அரசு கவனத்திற்கு கொண்டு வரும் திட்டம் அமலில் உள்ளது. விமர்சனங்களை நான் வரவேற்கிறேன். ஆனால் சிலர் கோபம் வரும் அளவுக்கு விமர்சனம் செய்கின்றனர். அது பற்றி நான் கவலைப்படுவது இல்லை. காங்கிரஸ் ஆட்சிக்கு வந்து, இரண்டரை ஆண்டுகள் ஆகிறது. வரலாற்றை எடுத்து பார்த்தால், நாங்கள் செய்தது போன்று வேறு யாரும் வேலை செய்தது இல்லை என தெரியும். நாடு முழுதும் சாலை பள்ளம் பிரச்னை உள்ளது. மற்ற மாநிலங்களில் ஊடகங்களை கட்டுப்படுத்துகின்றனர். நாங்கள் சுதந்திரமாக செயல்பட விட்டு உள்ளோம். பெங்களூரின் ஐந்து மாநகராட்சிகளுக்கும் தலா 50 கோடி ரூபாய் மதிப்பிலான பணிகளை, டெண்டருக்கு அழைக்காமல் நேரடியாக செய்ய அனுமதி வழங்கப்பட்டு உள்ளது. இதன் மூலம் மாநகராட்சிகளுக்கு ஊக்கம் அளித்து உள்ளோம். உதவி எண் 1533 மாநிலத்தில் வளர்ச்சி பணிகள் நடக்க வேண்டுமென்றால் மத்திய அரசுடன், மாநில அரசு கைகோர்த்தால் மட்டுமே, எந்த வேலையையும் திறம்பட செய்ய முடியும். நானும், ராமலிங்க ரெட்டியும் நினைத்தால் மட்டும், பெங்களூரை மாற்ற முடியாது. பொதுமக்களும் ஒத்துழைக்க வேண்டும். பெங்களூரின் விரிவான வளர்ச்சிக்காக, நான்கு முதல் ஐந்து சுரங்கபாதைகள், உயர்த்தப்பட்ட வழித்தடங்கள், ஈரடுக்கு மேம்பாலம் உட்பட 1.04 லட்சம் கோடி ரூபாய்க்கு திட்டம் வகுத்து உள்ளோம். ஐந்து மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில், ஏதாவது புகார் இருந்தால் 1533 என்ற உதவி எண்ணிற்கு மக்கள் அழைக்கலாம். இவ்வாறு அவர் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை