அரசு மீது ஊழல் புகார் கூறும் காங்., - எம்.எல்.ஏ.,க்களால் அதிர்ச்சி! : சேம் சைடு கோல் போடுவதால் முதல்வருக்கு நெருக்கடி
கர்நாடகாவில், முதல்வர் சித்தராமையா தலைமையில், காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது. அரசு அமைந்து கடந்த மே 20ம் தேதியுடன் இரண்டு ஆண்டுகள் நிறைவு பெற்றது. சாதனையை கொண்டாடிய சித்தராமையாவுக்கு, அடுத்தடுத்து சோதனைகள் அணிவகுத்து வருகின்றன.வாக்குறுதி திட்டங்களால் தங்கள் தொகுதிகளுக்கு நிதி கிடைக்கவில்லை என்று, ஆளுங்கட்சி எம்.எல்.ஏ.,க்களே அரசை விமர்சித்து பேச ஆரம்பித்துள்ளனர். வீட்டு வசதி துறையில் வீடுகளை ஒதுக்க லஞ்சம் வாங்கப்படுவதாக, காங்., மூத்த எம்.எல்.ஏ.,வான பி.ஆர்.பாட்டீல் பேசிய ஆடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இதனால், பி.ஆர்.பாட்டீலுக்கும், வீட்டு வசதி அமைச்சர் ஜமீர் அகமதுகானுக்கும் இடையில், வார்த்தை மோதல் ஏற்பட்டு உள்ளது. 'ஆடியோவில் இருப்பது எனது குரல் தான், நான் கூறியதில் உறுதியாக உள்ளேன்' என்று, பி.ஆர்.பாட்டீல் கூறி உள்ளார். புதிய திட்டங்கள்
இந்நிலையில், மேலும் சில காங்கிரஸ் எம்.எல்.ஏ.,க்களும், பல அமைச்சர்கள் மீது ஊழல் புகார் கூறி வருகின்றனர். தங்கள் தொகுதிகளுக்கு, அமைச்சர்களால் எந்த பயனும் இல்லை என்றும் சொல்லி வருகின்றனர். இப்படி ஒவ்வொரு எம்.எல்.ஏ.,வாக அரசுக்கு எதிராக பேசி வருவது, எதிர்க்கட்சிகள் கையில் லட்டு கிடைத்தது போன்று உள்ளது. அரசை கடுமையாக விமர்சிக்க ஆரம்பித்து உள்ளனர். சொந்த கட்சி எம்.எல்.ஏ.,க்கள் பேச்சால், சித்தராமையா கடும் அதிர்ச்சி அடைந்து உள்ளார். அரசின் அங்கமாக இருக்கும் அமைச்சர்கள் மீது, எம்.எல்.ஏ.,க்கள் ஊழல் புகார் கூறி, 'சேம் சைடு கோல்' போடுவது, முதல்வருக்கு நெருக்கடியை ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்து காங்கிரசின் சில எம்.எல்.ஏ.,க்கள் கூறுகையில், 'எங்கள் தொகுதிகளில் வளர்ச்சி பணிகள் நடக்கவே இல்லை. அரசிடம் இருந்து நிதி வாங்குவதற்கு சர்க்கஸ் செய்கிறோம். ஆளும்கட்சியில் இருந்தால் கூட நிதி கிடைப்பது இல்லை. புதிய திட்டங்களை மேற்கொள்ள ஒப்புதலும் கிடைப்பது இல்லை. முதல்வரால் ஒப்புதல் அளிக்கப்பட்ட நிதியை பெற முடியவில்லை. அமைச்சர்கள் எங்களுடன் கைகோர்த்து செயல்படுவது இல்லை' என்றனர். புண்பட்ட மனம்
இந்நிலையில், காக்வாட் காங்கிரஸ் ௦எம்.எல்.ஏ., ராஜு காகே நேற்று அளித்த பேட்டி:மாநில அரசின் நிர்வாக அமைப்பு முற்றிலும் சீர்குலைந்து விட்டது. இரண்டு ஆண்டுக்கு முன் என் தொகுதிக்கு, முதல்வரின் சிறப்பு மானியத்தின் கீழ் 25 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது. இதில், 12 கோடி ரூபாயை சாலை மேம்பாட்டிற்கும், மீதம் 13 கோடி ரூபாயை சமூக கூடங்கள் கட்டவும் முன்மொழியப்பட்டது. ஆனால், இதுவரை பணி ஆணை வழங்கப்படவில்லை. இதற்கு என்ன காரணம் என்று தெரியவில்லை.ஆலந்த் எம்.எல்.ஏ.,வான பி.ஆர்.பாட்டீல் கூறியதை விட, எனது தொகுதியில் நிலைமை மோசமாக உள்ளது. பி.ஆர்.பாட்டீல் பேசி இருப்பதை நான் வரவேற்கிறேன். என் மனம் மிகவும் புண்பட்டு உள்ளது. ராஜினாமா செய்யும் மனநிலையில் உள்ளேன். இன்னும் இரண்டு அல்லது மூன்று நாட்களில், எனது பதவியை ராஜினாமா செய்தாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை. இவ்வாறு அவர் கூறினார். சிறப்பு மானியம்
இதுகுறித்து, முதல்வர் சித்தராமையா பெங்களூரில் நேற்று அளித்த பேட்டி:ராய்ச்சூரில் நடக்கும் அரசு நிகழ்ச்சிக்கு செல்கிறேன். எம்.எல்.ஏ., பி.ஆர்.பாட்டீலை அங்கு வரும்படி அழைத்தேன். அந்த நிகழ்ச்சிக்கு அழைப்பு வராததால் வர மாட்டேன் என்று கூறி விட்டார். வரும் 25ம் தேதி என்னை சந்திப்பதாக கூறி உள்ளார். அவரிடம் பேசுவேன். முதல்வரின் சிறப்பு மானியம் என்று எதுவும் இல்லை. எம்.எல்.ஏ., ராஜு காகே, என்ன அர்த்தத்தில் பேசி உள்ளார் என்று எனக்கு தெரியவில்லை. அவரையும் அழைத்து பேசுவேன்.இவ்வாறு அவர் கூறினார்.