| ADDED : நவ 21, 2025 06:22 AM
கதக்: மக்காச்சோளத்திற்கு 3,000 ரூபாய் ஆதார விலை நிர்ணயிக்கக் கோரி, கதக்கின் லட்சுமேஸ்வரில் நேற்று கடை அடைப்பு போராட்டம் நடந்தது. கர்நாடகாவில் கதக், ஹாவேரி, தாவணகெரே உள்ளிட்ட வடமாவட்டங்களில், மக்காச்சோளம் அதிகம் விளைவிக்கப்படுகிறது. ஒரு குவின்டால் மக்காச்சோளத்திற்கு மத்திய அரசு 2,400 ரூபாயை ஆதார விலையாக நிர்ணயித்துள்ளது. மாநில அரசு கூடுதலாக 600 ரூபாய் வழங்கி, 3,000 ரூபாயை ஆதார விலையாக நிர்ணயிக்க வேண்டும் என்று, மக்காச்சோள விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர். தங்கள் கோரிக்கையை நிறைவேற்ற கோரி, வடமாவட்ட விவசாயிகள் போராட்டத்தை துவக்கி உள்ளனர். நேற்று நான்காவது நாளாக ஹாவேரி, கதக், தாவணகெரேயில் போராட்டங்கள் நடந்தன. கதக்கின் லட்சுமேஸ்வர் டவுனில், விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து, தாங்களாகவே முன்வந்து வியாபாரிகள் கடைகளை அடைத்தனர். குறைந்த பஸ்களே இயக்கப்பட்டன. நகரின் முக்கிய பகுதிகள் வெறிச்சோடி காணப்பட்டன. லட்சுமேஸ்வரில் விவசாயிகள் உண்ணாவிரத போராட்டம் நடத்தினர். இளம் மடாதிபதியான குமார மஹாராஜா கலந்து கொண்டார். வெயில், உடல் சோர்வு காரணமாக அவர் மயக்கமடைந்தார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.