ஆர்.எஸ்.எஸ்.,சுக்கு கட்டுப்பாடு விதிப்பதா? பிரியங்க் கார்கே மீது மற்ற அமைச்சர்கள் எரிச்சல்
பெங்களூரு: ஆர்.எஸ்.எஸ்.,சுக்கு கட்டுப்பாடு விதிக்கும் விஷயத்தில் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் பிரியங்க் கார்கே மீது, மற்ற அமைச்சர்கள் எரிச்சல் அடைந்துள்ளனர். அமைச்சர் பிரியங்க் கார்கே, சமீபத்தில் முதல்வர் சித்தராமையாவுக்கு கடிதம் எழுதினார். அதில், பள்ளிகள், சாலைகள், விளையாட்டு அரங்கங்கள் போன்ற பொது இடங்களில், ஆர்.எஸ்.எஸ்., நிகழ்ச்சிகளுக்கு தடை விதிக்கும்படி, வேண்டுகோள் விடுத்தார். இதன்படி பொது இடங்களில் சங்கங்கள், அமைப்புகள் நிகழ்ச்சிகள் நடத்த, அரசின் அனுமதி பெறுவதை கட்டாயமாக்கி அமைச்சரவைவில் முடிவு செய்யப்பட்டது. இது குறித்து அதிகாரப்பூர்வ உத்தரவும் வெளியானது. எதிர்ப்பில்லை ஆர்.எஸ்.எஸ்., உருவாகி, நுாறாண்டு நிறைவடைந்ததால், பல்வேறு இடங்களில் ஊர்வலம் நடத்துகிறது. பிரியங்க் கார்கேவின் தொகுதியான, கலபுரகியின் சித்தாபுரா தொகுதியில், நேற்று முன் தினம் ஆர்.எஸ்.எஸ்., அணிவகுப்பு நடத்த அனுமதி மறுக்கப்பட்டது. ஆனால் மாநிலத்தின் மற்ற மாவட்டங்களின் நகரங்களில் எந்த விதமான எதிர்ப்புகளும் இல்லாமல், ஆர்.எஸ்.எஸ்., ஊர்வலம் நடந்தது. பிரியங்க் கார்கேவை தவிர மற்ற அமைச்சர்கள், காங்கிரஸ் எம்.எல்.ஏ.,க்கள், தலைவர்கள் யாரும் முட்டுக்கட்டை போடவில்லை. பொது இடங்களில் ஆர்.எஸ்.எஸ்., நிகழ்ச்சிகளுக்கு தடை விதிக்கும்படி அமைச்சர் பிரியங்க் கார்கே கடிதம் எழுதியதற்கு, மூத்த அமைச்சர்கள் அதிருப்தி தெரிவித்துள்ளனர். முன்னாள் அமைச்சர் ராஜண்ணா, பகிரங்கமாகவே அதிருப்தி தெரிவித்திருந்தார். தலைவலி தேவையா? கடந்த வாரம் முதல்வர் சித்தராமையா, விருந்து ஏற்பாடு செய்த போது, பல அமைச்சர்கள், 'ஆர்.எஸ்.எஸ்.,சுக்கு நாம் கட்டுப்பாடு விதித்தால், மற்ற சமுதாயங்கள் நிகழ்ச்சி நடத்தும் போது, அவைகளுக்கு எப்படி அனுமதி அளித்தீர்கள் என்ற கேள்வி வரும். இது அரசு அதிகாரிகளுக்கு பெரும் தலைவலியாக இருக்கும். இதை கண்டித்து ஆர்.எஸ்.எஸ்., நீதிமன்றத்தை நாடினால், அந்த சங்கம் மேலும் பிரபலமடையும். சமுதாயங்கள் இடையே விவாதம் ஏற்படும். அப்போது நாம் அதிகமான போலீஸ் பாதுகாப்பு அளிக்க வேண்டி வரும். இது வரை எப்படி நடந்ததோ, அப்படியே நடக்க விடுவது நல்லது' என, கருத்து தெரிவித்து உள்ளனர். ஆர்.எஸ்.எஸ்.,சுக்கு கட்டுப்பாடு விதிக்கும் விஷயத்தில், பிரியங்க் கார்கேவுக்கு யாரும் பக்கபலமாக நிற்கவில்லை. இது பற்றி அவரது தந்தையும், காங்., தேசிய தலைவருமான மல்லிகார்ஜுன கார்கே அதிருப்தி தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.