தொழில் சார்ந்த நகரங்களை உருவாக்கினார்! கெம்பே கவுடாவுக்கு சித்தராமையா புகழாரம்
பெங்களூரு : “தொழில் சார்ந்த நகரங்களை உருவாக்கியவர்,” என, கெம்பே கவுடாவுக்கு, முதல்வர் சித்தராமையா புகழாரம் சூட்டி உள்ளார்.பெங்களூரை நிர்மாணித்த கெம்பே கவுடாவின் 516வது பிறந்த நாள் விழா, கன்னடா மற்றும் கலாசார துறை சார்பில், பெங்களூரு சும்மனஹள்ளியில் உள்ள பாபுஜெகஜீவன் ராம் பவனில் நேற்று கொண்டாடப்பட்டது.முதல்வர் சித்தராமையா பேசியதாவது:முந்தைய காங்கிரஸ் ஆட்சியில், ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 27ம் கெம்பே கவுடா பிறந்த நாளை அரசு விழாவாக கொண்டாட முடிவு செய்தோம். எங்கள் ஆட்சியில் கெம்பே கவுடா மேம்பாட்டு ஆணையம் துவங்கப்பட்டது. கெம்பாபுராவில் உள்ள கெம்பே கவுடாவின் சமாதியை மேம்படுத்தும் பணி நடக்கிறது.பெங்களூரு, சர்வதேச அளவில் புகழ்பெற கெம்பே கவுடா காரணம். அனைத்து மக்களின் வாழ்க்கையை மேம்படுத்த உண்மையான முயற்சி மேற்கொண்டார். 500 ஆண்டுகளுக்கு முன்பு அவர் ஒரு அரசியல்வாதியாகவும், தொலைநோக்கு பார்வை கொண்ட தலைவராகவும் இருந்தார்.தொழில் சார்ந்த நகரங்களை உருவாக்கிய பெருமை அவரையே சாரும். சும்மனஹள்ளி சதுக்கத்தில் கெம்பே கவுடா பவன் கட்ட அமைச்சரவை கூட்டத்தில் முடிவு செய்துள்ளோம். இன்று அடிக்கல் நாட்டி பணிகளை துவங்குகிறோம். அந்த பவனை நானே திறந்து வைப்பேன்.இவ்வாறு அவர் பேசினார். நாட்டின் சொத்து
துணை முதல்வர் சிவகுமார் பேசியதாவது:பெங்களூரின் புகழ் உலகம் முழுதும் பரவ கெம்பே கவுடா தான் காரணம். நாம் பிறக்கும்போது பூமிக்கு மேல் இருக்கிறோம். இறக்கும்போது பூமிக்கு உள்ளே போகிறோம். நாம் செய்த சாதனைகள் தான் பேசும். கெம்பே கவுடா செய்த சாதனைகள் யாராலும் மறக்க முடியாதவை. அவர் அனைத்து சமூகத்திற்கும் சொந்தமானவர். நாட்டின் சொத்து.தற்போதைய சூழ்நிலையில் பெங்களூரு நகரை மேம்படுத்துவது எளிதான காரியம் இல்லை. மக்கள்தொகை, வாகன எண்ணிக்கையை கருத்தில் கொண்டு நகருக்கு புதிய தோற்றம் அளிக்க முயற்சித்து வருகிறேன். சுரங்கப்பாதை அமைக்க உள்ளோம். குப்பையை மாபியாவை தடுக்க முயற்சி நடக்கிறது.பெங்களூரில் 60,000 பேர் அமர்ந்து பார்க்கும் வகையில் புதிய கிரிக்கெட் மைதானம் கட்டப்படும். இதற்காக 50 ஏக்கரில் நிலம் அடையாளம் காணப்பட்டுள்ளது. காவிரி 5ம் கட்ட பணிகளை முடித்து, ஆறாம் கட்டத்திற்கு தயாராகி வருகிறோம்.வரும் நாட்களில் சும்மனஹள்ளி வழியாக மெட்ரோ ரயில் செல்லும். பெங்களூரு பல்கலைக்கழக வளாகத்தில் 100 கோடி ரூபாய் செலவில், கெம்பே கவுடா பெயரில் ஆராய்ச்சி மையம் கட்டப்பட்டு வருகிறது. கெம்பே கவுடா பெயரில் உள்ள விமான நிலையம் உலகிற்கு முன்மாதிரி. அவரது பிறந் தநாளை மாநிலம் முழுதும் கொண்டாட வேண்டும் என்பது எங்கள் விருப்பம்.இவ்வாறு அவர் பேசினார்.இந்த நிகழ்ச்சியில் பல துறைகளில் சாதனை படைத்தவர்களுக்கு, கெம்பே கவுடா பெயரில் விருதுகளை வழங்கி, முதல்வரும், துணை முதல்வரும் கவுரவித்தனர். இந்நிகழ்ச்சியில் சுத்துார் மடாதிபதி தேசிகேந்திர சுவாமி மற்றும் அமைச்சர்கள், எம்.எல்.ஏ.,க்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.