உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு / சித்தராமையாவே முதல்வராக நீடிப்பார் சிவகுமார் தம்பி சுரேஷ் பரபரப்பு பேட்டி

சித்தராமையாவே முதல்வராக நீடிப்பார் சிவகுமார் தம்பி சுரேஷ் பரபரப்பு பேட்டி

பெங்களூரு: சித்தராமையாவுக்கு வயதாகவில்லை; ஆட்சிக்காலம் வரை அவரே முதல்வராக இருப்பார்,” என, துணை முதல்வர் சிவகுமாரின் தம்பி சுரேஷ் கூறினார். பெங்களூரில் நேற்று அவர் அளித்த பேட்டி: இம்மாதம் முதல்வர் பதவி மாற்றம் நடக்கும் என்று ஊடகங்கள் விவாதிப்பது அனைத்து ஊகம். கட்சி முன்பு எந்த விவாதமும் நடக்கவில்லை. சித்தராமையாவுக்கு வயதாகவில்லை. அடுத்த தேர்தலையும் அவரது தலைமையில் சந்திப்போம். ஆட்சிக்காலம் வரை அவரே முதல்வராக இருப்பார். அவர் தலைமையில் நாங்கள் கட்சியை கட்டமைப்போம். துணை முதல்வர் சிவகுமார் திடீரென டில்லி சென்றது பற்றி, ஊடகங்கள் பல விதமாக பேசுகின்றன. மேகதாது தொடர்பான வழக்கு இன்று உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வர உள்ளது. இதுதொடர்பாக வக்கீல்கள், அதிகாரிகளை சந்திக்க சென்று உள்ளார். வாய்ப்பு கிடைத்தால் கட்சி மேலிட தலைவர்களை சந்திப்பார். வலுவான தலைமை சித்தராமையா, சிவகுமாருக்கு மட்டும் கட்சியை வலுப்படுத்தும் பொறுப்பு இல்லை. அமைச்சர்கள் எம்.பி.பாட்டீல், பரமேஸ்வர், சதீஷ் ஜார்கிஹோளி, மஹாதேவப்பா உள்ளிட்ட அனைத்து தலைவர்களுக்கும் பொறுப்பு உள்ளது. டில்லி சென்றுள்ள சிவகுமார், ராகுலை சந்திப்பாரா என்று எனக்கு தெரியாது. டில்லிக்கு இப்போதைக்கு வர வேண்டாம் என்று, கட்சியின் மூத்த தலைவர்களுக்கு மேலிடம் செய்தி அனுப்பி உள்ளது. நான் பெரிய தலைவர் இல்லை என்பதால், எப்போது வேண்டும் என்றாலும் டில்லி செல்வேன். முதல்வர் பதவிக்கான போட்டியில் இருந்து சிவகுமார் விலகிவிட்டாரா என்று ஊடகங்கள் பேசுகின்றன. அது பற்றி இப்போது பேச தேவை இல்லை. அவரது தலைமை வலுவாக உள்ளது. தேர்தல் பணிகள் ஆட்சி அமைத்ததில் சிவகுமாருக்கு பங்கு உள்ளது. இதனால் அவருக்கு முதல்வர் பதவி வழங்க வேண்டும் என்று ஆதரவாளர்கள் கூறுகின்றனர். இதில் தவறு இல்லை. அமைச்சரவை மாற்றம் முதல்வர், கட்சி மேலிடத்தின் முடிவு. கர்நாடக காங்கிரஸ் தலைவர் பதவிக்கு நான் ஆசைப்படவில்லை. தலைவர் மாற்றம் நடக்குமா என்றும் எனக்கு தெரியாது. அதுவும் கட்சியின் முடிவு. கிரேட்டர் பெங்களூரு ஆணையத்திற்கு அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் தேர்தல் நடத்த ஏற்பாடுகள் நடக்கின்றன. தேர்தல் பணிகளை மேற்கொள்ளும்படி தொண்டர்களுக்கு அறிவுறுத்தி உள்ளோம். தேர்தல் மீண்டும் ஒத்திவைக்கப்பட்டால், உச்ச நீதிமன்றத்தின் கண்டிப்பை நாம் பெற வேண்டி இருக்கும். அனைத்து உள்ளாட்சி அமைப்புகளுக்கும் அடுத்த ஆறு முதல் ஏழு மாதங்களில் தேர்தல் நடக்கலாம். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை