உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு /  எஸ்.ஐ.ஆர்., பணிகள் இன்று துவக்கம்: அக்., 7ல் வாக்காளர் பட்டியல்

 எஸ்.ஐ.ஆர்., பணிகள் இன்று துவக்கம்: அக்., 7ல் வாக்காளர் பட்டியல்

பெங்களூரு: கர்நாடகாவில், எஸ்.ஐ.ஆர்., எனும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணி இன்று துவங்குகிறது. அக்டோபர் 7ல் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப் படுகிறது. வாக்காளர் பட்டியலில் தகுதியுள்ளவர்கள் பெயர் விடுபடுவதை தவிர்க்கவும்; போலியான பெயர்களை நீக்கவும்; வெளிநாடுகளில் இருந்து சட்டவிரோதமாக குடியேறி, இங்கு வாக்காளர் அட்டை பெற்றவர்களை, வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கும் நோக்கிலும், எஸ்.ஐ.ஆர்., எனும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணியை, தலைமை தேர்தல் ஆணையம் செய்து வருகிறது. தமிழகம், கேரளா, மேற்கு வங்கம், அசாம் உள்ளிட்ட மாநிலங்களில் பணிகள் வெற்றிகரமாக முடிந்த நிலையில், 5.54 கோடி வாக்காளர்களை கொண்ட கர்நாடகாவில், ஜூன் 30ல், எஸ்.ஐ.ஆர்., பணிகள் துவங்கும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. கர்நாடக தலைமை தேர்தல் அதிகாரி அன்புகுமார் தலைமையில், எஸ்.ஐ.ஆர்., பணிக்கு தேவையான படிவங்கள் அச்சிடப்பட்டு, மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டன. கண்காணிப்பு இந்நிலையில், இன்று துவங்கி அடுத்த மாதம் 29ம் தேதி வரை, எஸ்.ஐ.ஆர்., பணி நடக்கவுள்ளது. ஓட்டுச்சாவடி நிலை அலுவலர்கள், மேற்பார்வையாளர்கள் என ஒரு லட்சத்திற்கும் அதிகமான அரசு ஊழியர்கள் பணியில் ஈடுபட உள்ளனர். அரசியல் கட்சிகள் சார்பில் நியமிக்கப்பட்ட 72,058 ஓட்டுச்சாவடி முகவர்களும், அதிகாரிகளுடன் சென்று பணிகளை கண்காணிக்க உள்ளனர். இன்று முதல், மக்கள் வீடு தேடி வரும் ஓட்டுச்சாவடி நிலை அலுவலர்கள், எஸ்.ஐ.ஆர்., படிவங்களை வழங்குவர். அதில் கேட்கப்பட்டுள்ள விபரங்களை நிரப்பி கொடுக்க வேண்டும். படிவங்களை நிரப்பிய பின், அதற்கான ரசீது வழங்கப்படும். ஆட்சேபனை புதிய வாக்காளர்களும் தங்கள் விபரத்தை கொடுத்து, வாக்காளர் அட்டைக்கு விண்ணப்பித்து கொள்ளலாம். பணிகள் முடிந்த பின், ஆகஸ்ட் 5ல் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும். இதில், ஏதாவது ஆட்சேபனை இருந்தால், அதை தெரிவிக்க செப்டம்பர் 4ம் தேதி வரை கால அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது. ஆட்சேபனை உள்ளிட்ட அனைத்து நடைமுறைகளும் முடிந்த பின், அக்டோபர் 7ல் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும். எஸ்.ஐ.ஆர்., பணியில் ஏதாவது சந்தேகம் இருந்தால், அதை தீர்த்து கொள்ள வாக்காளர் வசதி மையங்களும் அமைக்கப்பட்டுள்ளன. தேர்தல் ஆணையத்தின் உதவி எண்கள் 1950 மற்றும் 1800- 4255- 1950 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்களில் அழைத்தும் தகவல் பெறலாம். ஒருவேளை அதிகாரிகள் வரும்போது வீட்டில் இல்லாவிட்டாலும் கவலைப்பட தேவையில்லை. தேர்தல் ஆணையத்தின் அதிகாரபூர்வமான voters.eci.gov.inஎன்ற முகவரிக்கு சென்று விண்ணப்பிக்கலாம். மொபைல் போனில் ECINET அல்லது Voter Helpline App என்ற செயலியை, பதிவிறக்கம் செய்து அதன்மூலம் விண்ணப்பிக்கலாம். வாக்காளர்கள் எண்ணிக்கை குறையுமா? தமிழகம், மேற்கு வங்கத்தில் வெளிநாட்டினரையும் வாக்காளர்களாக சேர்த்து, அவர்களுக்கு வாக்காளர் அட்டை கொடுத்திருப்பதாக குற்றச்சாட்டு இருந்தது. அம்மாநிலங்களில் நடந்த எஸ்.ஐ.ஆர்., பணியின் போது லட்சக்கணக்கான போலி வாக்காளர்கள் நீக்கப்பட்டனர். கர்நாடகாவிலும் வங்கதேசத்தினர், பாகிஸ்தானியர் சட்டவிரோதமாக வசிப்பதுடன், அவர்களுக்கு வாக்காளர் அடையாள அட்டை உள்ளதாக குற்றச்சாட்டு உள்ளது. எஸ்.ஐ.ஆர்., பணிக்கு பின், கர்நாடகாவிலும் வாக்காளர்கள் எண்ணிக்கை, கணிசமாக குறைய வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இணைய முகவரி ஓட்டுச்சாவடி நிலை அலுவலர்கள், மேற்பார்வையாளர்கள் உள்ளிட்ட அதிகாரிகள் பெயர்கள், அவர்களின் மொபைல் எண்களை https://ceo.karnataka.gov.in/vfc/details/ என்ற இணைய முகவரியில் சென்று பார்த்து கொள்ளலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !