சட்டசபை சுமுகமாக நடந்து முடிந்தது சபாநாயகர் காதர் அறிவிப்பு
பெங்களூரு : மார்ச் 3ம் தேதி முதல் 21ம் தேதி வரை 15 நாட்கள் சட்டசபை கூட்டம் நடந்தது; 99 மணி 34 நிமிடங்கள் கூட்டத்தொடர் நடந்தது.இதுதொடர்பாக, சபாநாயகர் காதர் நேற்று வெளியிட்ட அறிக்கை:சட்டசபையின் இரண்டு சபைகளின் கூட்டத்தொடரையொட்டி, மார்ச் 3ம் தேதி கவர்னர் தாவர்சந்த் கெலாட் உரையாற்றினார். கவர்னரின் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தில், 14 உறுப்பினர்கள் பங்கேற்றனர். மார்ச் 17ல் நன்றி தீர்மானம் அங்கீகரிக்கப்பட்டது.முதல்வர் சித்தராமையா, மார்ச் 7ல் 2025 - 26ம் ஆண்டுக்கான பட்ஜெட் தாக்கல் செய்தார். துறை கோரிக்கைகள் தொடர்பான விவாதங்களில் 80 உறுப்பினர்கள் பங்கேற்றனர்.கிரேட்டர் பெங்களூரு நிர்வாக மசோதா - 2024, நிதி விநியோக மசோதா உட்பட 27 மசோதாக்கள் தாக்கல் செய்யப்பட்டன. பல்வேறு அறிக்கைகள் சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்டு, அங்கீகரிக்கப்பட்டன.சில குழப்பங்கள் ஏற்பட்டபோது, கூட்டம் தள்ளி வைக்கப்பட்டது. முதல்வர், எதிர்க்கட்சித் தலைவர்கள், மூத்த உறுப்பினர்கள் என, அனைவரின் ஒத்துழைப்பில் சட்டசபை சுமூகமாக நடந்தது மகிழ்ச்சி அளிக்கிறது.கூட்டத்தொடரின் நிறைவு நாளன்று, சபையில் எதிர்க்கட்சியின் சில உறுப்பினர்கள், சபாநாயகரின் பீடத்தை முற்றுகையிட்டு, நமது மூத்தவர்கள் வகுத்து கொடுத்த ஒழுங்கு, சம்பிரதாயத்தை மீறி, ஜனநாயகத்துக்கு பாதிப்பு ஏற்படுத்தினர்.இதுகுறித்து அவர்கள் தன்னாய்வு செய்து கொள்ள வேண்டும். சபாநாயகர் உத்தரவை பொருட்படுத்தாமல், சபையின் கூட்டத்துக்கு இடையூறு ஏற்படுத்தினர். ஒழுங்கின்றி நடந்து கொண்டனர்.எனவே, 18 எம்.எல்.ஏ.,க்கள் ஆறு மாதங்கள் வரை சட்டசபைக்கு வர தடைவிதித்து சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். மிகவும் வருத்தத்துடன், கட்டாயத்தின் பேரில் அவர்களை சஸ்பெண்ட் செய்தேன்.கூட்டத்தொடர் நல்ல முறையில் நடக்க உதவிய முதல்வர், அமைச்சர்கள், காங்கிரஸ் தலைமை கொறடா, உறுப்பினர்கள். ஊடக பிரதிநிதிகள், அதிகாரிகள், ஊழியர்கள் என, அனைவருக்கும் நன்றி தெரிவிக்கிறேன்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.