16ல் சிறப்பு அமைச்சரவை கூட்டம் எஸ்.சி., உள் இடஒதுக்கீடு முடிவு
பெங்களூரு: ''எஸ்.சி., பிரிவினர் உள் இட ஒதுக்கீடு குறித்து, நீதிபதி நாகமோகன் தாஸ் ஆணையம் அளித்த அறிக்கை, அமைச்சரவை கூட்டத்தில் வைக்கப்பட்டது. அறிக்கை குறித்து, வரும் 16ம் தேதி நடக்கும் சிறப்பு அமைச்சரவை கூட்டத்தில் ஆலோசித்து முடிவு செய்யப்படும்,'' என சட்டத்துறை அமைச்சர் ஹெச்.கே.பாட்டீல் தெரிவித்தார். கர்நாடக அமைச்சரவை கூட்டம், முதல்வர் சித்தராமையா தலைமையில், பெங்களூரில் நேற்று நடந்தது. கூட்டம் முடிந்த பின், அமைச்சர் ஹெச்.கே.பாட்டீல் அளித்த பேட்டி: விவசாயத்துறை சார்பில், 171.91 கோடி ரூபாய் செலவில், 13 குளிர்பதன மையங்கள்; பெலகாவியின், கித்துாரில் 100 படுக்கை வசதி கொண்ட மருத்துவமனை; மொளகால்மூரு தாலுகா சுரங்க பாதிப்பு பகுதி என்பதால், இங்குள்ள மக்களுக்கு சுகாதார சேவை வழங்க, 100 படுக்கை வசதி கொண்ட, தாலுகா மருத்துவமனையை, 100 கோடி ரூபாய் செலவில், 200 படுக்கை வசதி கொண்ட மருத்துவமனையாக தரம் உயர்த்துதல். ஹாவேரி மாவட்டம், ஹனகல் தாலுகாவின், வரதா ஆற்றில் இருந்து, நெரகல் மற்றும் குசனுரா ஏற்ற நீர்ப்பாசனம் மூலமாக 111 ஏரிகளை நிரப்ப, 220 கோடி ரூபாயில் திட்டம்; பாகல்கோட் நகரின், சூகநாதகி கிராமம் மற்றும் அதன் சுற்றுப்புறங்களுக்கு நீர்ப்பாசன வசதி செய்ய, 17 கோடி ரூபாயில் திட்டம். சிறுபான்மையின பெண்களின் கல்விக்காக, தலா 2.65 கோடி ரூபாய் செலவில் மகளிர் கல்லுாரி; மைசூரு டி.நரசிபுராவின் தலக்காடு கிராமத்துடன், பி. ஷெட்டிஹள்ளி, கூருபாளனஹுந்தி கிராமங்களை சேர்த்து, தலக்காடு பட்டண பஞ்சாயத்தாக தரம் உயர்த்துதல். ஹுன்சூரின், கட்டேமளவாடி அணை, கால்வாய்கள் உட்பட பல்வேறு கால்வாய்களை அதிநவீனமாக்க 49.85 கோடி ரூபாய் செலவிட அனுமதி; எலபுர்கா, ஜேவர்கி, யாத்கிரில் பி.எஸ்.சி., நர்சிங் கல்லுாரிகளுக்கு, 41.91 கோடி ரூபாய் செலவிட ஒப்புதல் அளிக்கப்பட்டது. எஸ்.சி., பிரிவினர் உள் இடஒதுக்கீடு குறித்து, நீதிபதி நாகமோகன் தாஸ் ஆணையம் அளித்த அறிக்கை, இன்று (நேற்று) நடந்த அமைச்சரவை கூட்டத்தில் பெறப்பட்டது. அறிக்கை குறித்து, வரும் 16ம் தேதி நடக்கும் சிறப்பு அமைச்சரவை கூட்டத்தில் ஆலோசித்து முடிவு செய்யப்படும். இவ்வாறு அவர் கூறினார்.