அடுத்தாண்டு வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தம் துவக்கம்
பெங்களூரு : ''கர்நாடகாவில் அடுத்தாண்டு வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தம் மேற்கொள்ளப்படும். இதற்கான ஏற்பாடுகளை, மாநில தேர்தல் கமிஷன் துவங்கி உள்ளது,'' என, மாநில தலைமை தேர்தல் அதிகாரி அன்பு குமார் தெரிவித்தார். பெங்களூரில் அவர் நேற்று அளித்த பேட்டி: கர்நாடகாவில் 2002ல் எஸ்.ஐ.ஆர்., எனும் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தம் மேற்கொள்ளப்பட்டது. 23 ஆண்டுகளுக்கு பின், எஸ்.ஐ.ஆர்., மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டுள்ளது. அடுத்தாண்டு எஸ்.ஐ.ஆர்., நடத்தப்படும். இதற்கான ஏற்பாடுகளை, மாநில தேர்தல் கமிஷன் துவங்கி உள்ளது. பி.எல்.ஓ., எனும் மண்டல ஓட்டுச்சாவடி அதிகாரிகள், ஒவ்வொரு வாக்காளரின் வீட்டுக்கும் சென்று, வாக்காளர் அடையாள அட்டையை சரிபார்ப்பர். கடந்த 2002ல் நடந்த திருத்த பட்டியலுக்கும், 2025ல் வாக்காளர் பட்டியலுக்கும் உள்ள வேறுபாடுகள் சரிபார்க்கப்படும். வீடு வீடாக சென்று பார்வையிடும்போது, வாக்காளர்களிடம் இரண்டு படிவங்களை கொடுத்து தகவல்களை பெறுவர். அதிகாரிகள், படிவங்களில் ஒன்றில் கையெழுத்திட்டு, வாக்காளர்களிடம் திருப்பித் தருவர். வீட்டில் யாரும் இல்லை என்றால், ஓட்டுச்சாவடி அதிகாரிகள் மூன்று முறை பக்கத்து வீட்டினரின் உதவியுடன் தொடர்பு கொள்வர். வாக்காளர் அடையாள அட்டையில் புகைப்படம் தெளிவாக இல்லை என்றால், புதிய புகைப்படத்தை வாக்காளர் வழங்க வேண்டும். தேர்தல் கமிஷன் கேட்கும் ஆவணங்களை வாக்காளர் வழங்க வேண்டும். தற்போது எஸ்.ஐ.ஆர்.,ல் ஆவணங்கள் வழங்கப்பட்டிருந்தால், அடுத்த திருத்தத்தில் ஆவணம் கேட்கப்படாது. அதிகாரிகள் வரும்போது, வீட்டில் இல்லாதவர்கள், ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம். இரு இடங்களில் ஒருவர் பெயர் இருந்தால், புகைப்பட ஸ்கேனிங் அமைப்பு மூலம் கண்டறிந்து, நடவடிக்கை எடுக்கப்படும். இரு இடங்களிலும் ஒரே நபர் விண்ணப்பித்திருந்தால், அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்படும். எஸ்.ஐ.ஆர்., பட்டியல் திருத்தப்பட்ட பின்னரும், வாக்காளர் பெயர் இல்லை என்றால், பி.எல்.ஓ.,க்கள் கையெழுத்திட்ட படிவம் மூலம் விசாரிக்கலாம். இது தொடர்பாக அனைத்து கட்சித் தலைவர்களுடனும் நேற்று முன்தினம் ஆலோசனை நடத்தப்ப ட்டது. ஒவ்வொரு பூத்துக்கும் முகவர்களை நியமிக்க அரசியல் கட்சி தலைவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளது. மாநிலத்தில் மொத்தம் 55 ஆயிரம் ஓட் டுச்சாவடிகள் உள்ளன. எஸ்.ஐ.ஆர்.,க்கு 18 ஆயிரம் பூத் அளவிலான அதிகாரிகள் இருப்பர். ஆசிரியர்கள், அங்கன்வாடி ஊழியர்கள் பூத் அளவிலான அதிகாரிகளாக பயன்படுத்தப்படுவர். இருப்பினும், இந்த செயல்முறை, எப்போது துவங்கும் என்பது இன்னும் முடிவாகவில்லை. எஸ்.ஐ.ஆர்., ஏற்பாடுகள் வரும் 23ம் தேதிக்குள் நிறைவடையும். மத்திய அரசின் அதிகாரப்பூர்வ அறிவிப்புக்கு பின், எஸ்.ஐ.ஆர்., பணிகள் துவங்கப்படும். இவ்வாறு அவர் கூறி னார்.