பா.ஜ.,வினர் போராட்டத்தை தவிர்க்க மாற்று பாதையில் பயணித்த ஸ்டாலின்
குடகு: தமிழக சட்டசபை தேர்தலில் தோல்வி அடைந்த நிலையில், முன்னாள் முதல்வர் ஸ்டாலின் தன் குடும்பத்துடன், கர்நாடக மாநிலம், குடகு மாவட்டத்துக்கு ஓய்வெடுக்க வந்தார். கடந்த சில நாட்களாக, குடகில் உள்ள தனியார் சொகுசு விடுதியில் தங்கியிருந்தனர்; சுற்றுப்பகுதிகளில் உள்ள சுற்றுலா தலங்களை ரசித்தனர். இவர்கள், நேற்று தமிழகத்துக்கு புறப்பட்டனர். முதலில் மடிகேரி - குஷால்நகர் - மைசூரு பாதை வழியாக, தமிழகத்துக்கு திரும்ப திட்டமிட்டிருந்தனர். சனாதன தர்மத்தை அவர் அவமதித்ததாக குற்றம்சாட்டி, குஷால்நகர் அருகில் உள்ள, குட்டே ஹோசூரில் அவரை, வழிமறித்து போராட்டம் நடத்துவதாக பா.ஜ., தொண்டர்கள் தயாராக இருந்தனர். அப்படி நடந்தால் சட்டம் - ஒழுங்கு பாதிக்கப்படும் என, எதிர்பார்த்து முன்னெச்சரிக்கையாக, குஷால்நகர் மற்றும் அதன் சுற்றுப்பகுதியில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. மடிகேரி - குஷால்நகர் நெடுஞ்சாலை உட்பட பல இடங்களில் கூடுதல் போலீசார் நியமிக்கப்பட்டிருந்தனர். பா.ஜ.,வினர் போராட்டம் நடத்த தயாராவது குறித்து, உளவுத்துறை மூலம் ஸ்டாலினுக்கும் தகவல் சென்றது. எனவே அவரது பாதுகாப்பு படையினர், பாதையை மாற்றி, சித்தாபுரா மற்றும் பிரியாபட்டணா பாதையை தேர்வு செய்தனர். பாதையை மாற்றியும், குஷால்நகரின் கணபதி கோவில் அருகில், ஹிந்து தொண்டர்கள் குவிந்து, ஸ்டாலினை எதிர்த்து கோஷமிட்டனர். அமைதியான முறையில் போராட்டம் நடத்தினர். எந்த அசம்பாவிதமும் ஏற்படவில்லை. ஸ்டாலின் குடும்பத்தினர் மாற்று பாதையில், குடகை விட்டு பாதுகாப்பாக வெளியேறி, பிரியாபட்டணா வழியாக தமிழகத்துக்கு சென்றதாக, போலீசார் தெரிவித்தனர்.