ஓட்டு திருட்டு பஜனையை நிறுத்துங்கள்! மத்திய அமைச்சர் குமாரசாமி பாய்ச்சல்
''பீஹாரில் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு மாபெரும் வெற்றி கிடைத்துள்ளது. ஓட்டுத் திருட்டு என்ற பஜனையை நிறுத்துங்கள்,'' என மத்திய கனரக தொழிற்துறை அமைச்சர் குமாரசாமி தெரிவித்தார். டில்லியில் நேற்று அவர் அளித்த பேட்டி: பீஹார் சட்டசபை தேர்தலில், தேசிய ஜனநாயக கூட்டணி மாபெரும் வெற்றி பெற்றுள்ளது. இந்த வெற்றி கர்நாடக சட்டசபை தேர்தலில், தாக்கத்தை ஏற்படுத்தும். பா.ஜ., - ம.ஜ.த., கூட்டணி அடுத்த தேர்தலில், பெரும்பான்மையுடன் அரசு அமைப்பது உறுதி. கர்நாடக காங்கிரஸ் அரசு, ஆளுங்கட்சிக்கு எதிரான அலையால் திணறுகிறது. கடந்த இரண்டரை ஆண்டாக, தலைமை மாற்றம் விவாதத்திலேயே காலம் கடத்தியுள்ளனர். இதனால் மக்கள் வெறுப்படைந்துள்ளனர். எப்போது சட்டசபை தேர்தல் வரும் என காத்திருக்கின்றனர். மாநிலத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி வலுவாக உள்ளது. பா.ஜ., - ம.ஜ.த., தலைவர்கள் ஒரே பாதையில் செல்கிறோம். பீஹாரை போன்று கர்நாடகாவில் அரசு அமைக்க, பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் பணியாற்றுவோம். பீஹாரின் சாதனையை முறியடிப்போம். ஓட்டுத் திருட்டு என, குற்றஞ்சாட்டியவர்களுக்கு, பீஹார் மக்கள் சரியான பாடம் கற்பித்துள்ளனர். ஜனநாயகத்தின் மீது காங்கிரஸ் நம்பிக்கையை இழந்துள்ளது. பொய்யான கதைகளை உருவாக்கி, அவப்பிரசாரம் செய்தது. பீஹாரின் அறிவாளி வாக்காளர்கள், அவப்பிரசாரத்தை பொருட்படுத்தவில்லை. அவர்களை நான் பாராட்டுகிறேன். மோடி தலைமையிலான கூட்டணி வெற்றிக்காக பாடுபட்ட அனைவரையும் பாராட்டுகிறேன். ஓட்டுத் திருட்டு பஜனையை நிறுத்துங்கள் என, பீஹார் மக்கள் காங்கிரசை அறிவுறுத்தியுள்ளனர். கர்நாடகாவில் முந்தைய சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் 135 தொகுதிகளில் வெற்றி பெற்றது எப்படி? இவர்கள் தேர்தல் ஆணையத்தின் உதவியுடன் வெற்றி பெற்றனரா? இனியாவது அக்கட்சியினர், அகங்காரத்துடன் பேசுவதை நிறுத்த வேண்டும். இவ்வாறு அவர் கூறினார் - நமது நிருபர் - .