பொது இடங்களில் மதுபானம் அருந்தினால் கடும் நடவடிக்கை
கலபுரகி : மதுக்கடைகளில் வாங்கி பொது இடங்களில் மது குடித்து, பொது மக்களுக்கு தொல்லை கொடுப்போர் மீது, கடும் நடவடிக்கை எடுக்க, கலால் துறை முடிவு செய்துள்ளது.இது குறித்து கலால் துறை அமைச்சர் திம்மாபூர், நேற்று அளித்த பேட்டி:மதுக்கடைகளில், பாட்டில் வாங்கும் சிலர், பொது இடங்களில் மது அருந்துகின்றனர். இதனால் பொது மக்களுக்கு பாதிப்பு ஏற்படுகிறது. கலபுரகி நகரிலும் இதுபோன்ற சம்பவங்கள் நடக்கின்றன. இவர்களால் சுற்றுச்சூழலுக்கும் பாதிப்பு ஏற்படுகிறது. மக்களாலும் நடமாட முடியவில்லை.பொது இடங்களில் அமர்ந்து, மது அருந்தி விட்டு, கண்ட, கண்ட இடங்களில் பாட்டில்களை வீசுகின்றனர். இதனால் பெண்களுக்கும், சிறார்களுக்கும் தர்மசங்கடம் ஏற்படுகிறது. இதைத் தடுக்க கலால்துறை நடவடிக்கை எடுக்கும்.சாலை, பூங்கா போன்ற பொது இடங்களில் மதுபானம் அருந்துவோர் மீது, நடவடிக்கை எடுக்க மக்களின் ஒத்துழைப்பும் வேண்டும்.கஞ்சா உட்பட மற்ற போதைப்பொருட்கள் விற்பது, கிராமங்களில் வீடுகளில் மது விற்பதை கட்டுப்படுத்த, கடும் நடவடிக்கை எடுக்கும்படி, அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளேன்.இவ்வாறு அவர் கூறினார்.