உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு / ஆன்லைன் விளையாட்டுக்கு பணம்: மிரட்டியதால் மாணவர் தற்கொலை

ஆன்லைன் விளையாட்டுக்கு பணம்: மிரட்டியதால் மாணவர் தற்கொலை

தாவணகெரே: ஆன்லைன் விளையாட்டு விளையாட, வீட்டில் இருந்து பணம் கொண்டு வரும்படி நெருக்கடி கொடுத்ததால், 8ம் வகுப்பு மாணவர் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுதொடர்பாக, சென்னகிரி போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் ரவிஷ் கூறியதாவது: சென்னகிரி தாலுகாவின் பாண்டோமட்டி கிராமத்தை சேர்ந்தவர் மனோஜ், 13. எட்டாம் வகுப்பு படிக்கிறார். அதே கிராமத்தில் வசிக்கும் நான்கு சிறுவர்கள், 'பிரி பயர்' என்ற ஆன்லைன் விளையாட்டு விளையாடி வந்தனர். தங்களை விட வசதியான குடும்பத்தை சேர்ந்த மனோஜிடம், வீட்டில் இருந்து பணம் கொண்டு வரும்படி அவர்கள் நால்வரும் கூறினர். இவரும் ஆரம்பத்தில் பெற்றோருக்கு தெரியாமல் அவ்வப்போது பணம் கொடுத்து வந்தார். நாளடைவில் பணம் கொண்டு வர மறுத்த மனோஜை, கொலை செய்து விடுவோம் என்று நான்கு சிறுவர்களும் மிரட்டி உள்ளனர். இதனால் பயந்துபோன சிறுவன், பணத்தை கொடுத்து வந்தார். கடந்த சில நாட்களுக்கு முன், வீட்டில் வைக்கும் பணம் காணாமல் போனது குறித்து மகனிடம் விசாரித்தபோது, உண்மையை கூறினார். இதையடுத்து மனோஜுடன், சென்னகிரி போலீஸ் நிலையத்துக்கு சென்ற பெற்றோர், நான்கு சிறுவர்கள் மீது புகார் அளித்து உள்ளனர். பின், வீட்டுக்கு திரும்பி விட்டனர். விசாரணை துவங்குவதற்குள் சிறுவன் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதையடுத்து, நான்கு சிறுவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது. போலீசார் விசாரிக்கின்றனர். இவ்வாறு கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி