உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு /  விடுதியில் 20 கம்ப்யூட்டர்கள் மாயம் அதிகாரிகள் மீது மாணவர்கள் குற்றச்சாட்டு

 விடுதியில் 20 கம்ப்யூட்டர்கள் மாயம் அதிகாரிகள் மீது மாணவர்கள் குற்றச்சாட்டு

கதக்: கர்நாடக சமூக நலத்துறை கட்டுப்பாட்டில் இயங்கும் மாணவர் விடுதியில், 20க்கும் மேற்பட்ட கம்யூட்டர்கள், ஏர் கண்டிஷனர்கள் காணாமல் போயுள்ளன. 'அதிகாரிகள் தான் அவற்றை தங்கள் வீடுகளில் வைத்துள்ளனர்' என, மாணவர்கள் கூறுகின்றனர். மாநிலத்தில் உள்ள, அரசு சார்ந்த மாணவர் விடுதிகளில், மாணவர்களுக்கு தேவையான கம்ப்யூட்டர்கள், ஏர் கன்டிஷனர்கள் உட்பட பொருட்களை, அரசு வழங்குகிறது. மாணவர்களின் கல்விக்கு உதவும் நோக்கில், இத்தகைய வசதிகளை அரசு செய்கிறது. அந்த வகையில், கதக் மாவட்டத்தின், சூர்ய நகரில் மாணவர் விடுதி உள்ளது. இது, சமூக நலத்துறை கட்டுப்பாட்டில் இயங்குகிறது. இங்கு ஏழைகள், தலித் சமுதாய மாணவர்களின் டிஜிட்டல் கல்விக்கு வசதியாக, லட்சக்கணக்கான ரூபாய் செலவில், ஹைடெக் கம்ப்யூட்டர்களை அரசு வழங்கியுள்ளது. மேலும், வெப்ப தாக்கத்தால் மாணவர்கள் அவதிப்படக்கூடாது என்பதால், ஏர் கண்டிஷனர்களையும் வாங்கி கொடுத்துள்ளது. மாணவர் விடுதியில் லட்சக்கணக்கான ரூபாய் செலவில், ஹைடெக் ஆய்வகமும் அமைத்துள்ளது. ஆய்வகத்தில் இருந்த, 20க்கும் மேற்பட்ட கம்ப்யூட்டர்கள், ஆறு ஏர் கன்டிஷனர்கள் திடீரென காணாமல் போயுள்ளன. இவை நல்ல நிலையில் இருந்த கம்ப்யூட்டர்களாகும். இப்போது, ஆய்வகம் என்ற பெயரில் வெறும் கட்டடம் மட்டுமே உள்ளது. தரமான ஆய்வகம் இருந்தும், கம்ப்யூட்டர்கள் இல்லாத காரணத்தால், பயிற்சி பெற முடியாமல் மாணவர்கள் அவதிப்படுகின்றனர். விடுதியில் இருந்த கம்ப்யூட்டர்கள், ஏர் கண்டிஷனர்களை அதிகாரிகளே, இரவோடு இரவாக கொள்ளையடித்து சென்றதாக, மாணவர்கள் குற்றஞ்சாட்டுகின்றனர். இது தொடர்பாக, விசாரணை நடத்தி, 'லபக்'கிய அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். காணாமல் போன கம்ப்யூட்டர்கள், ஏர் கன்டிஷனர்களை மீட்க வேண்டும் என, சமூக நலத்துறையிடம் வலியுறுத்தியுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை