உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு / வீரேந்திர ஹெக்டேயிடம் மன்னிப்பு கேட்பேன் பொய் புகார் அளித்த சுஜாதா பட் பேட்டி 

வீரேந்திர ஹெக்டேயிடம் மன்னிப்பு கேட்பேன் பொய் புகார் அளித்த சுஜாதா பட் பேட்டி 

மங்களூரு : ''தர்மஸ்தலா வழக்கில் பொய் புகார் அளித்ததற்காக, மஞ்சுநாதா கோவில் நிர்வாக அதிகாரி வீரேந்திர ஹெக்டேயிடம் மன்னிப்பு கேட்பேன்,'' என்று, சுஜாதா பட் கூறினார். தட்சிண கன்னடாவின் தர்மஸ்தலாவில் பலாத்காரம் செய்து கொல்லப்பட்ட, நுாற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் உடல்களை புதைத்ததாக, சின்னையா என்பவர் அளித்த புகாரில், எஸ்.ஐ.டி., எனும் சிறப்பு புலனாய்வு குழுவை அரசு அமைத்தது. இந்த குழு அமைக்கப்படும் முன்பே, சுஜாதா பட் என்பவர், 'கடந்த 2002ல் தர்மஸ்தலா சென்ற எனது மகள் அனன்யா பட்டை காணவில்லை. அவர் பலாத்காரம் செய்து கொல்லப்பட்டு இருக்கலாம்; அவரது எலும்பு கூடுகளையாவது தர வேண்டும்' என்று போலீசில் புகார் அளித்தார். சுஜாதா பட்டிடம், எஸ்.ஐ.டி., அதிகாரிகள் விசாரித்தனர். விசாரணையில் அவருக்கு, அனன்யா பட் என்ற மகளே இல்லை என்பதும், சொத்து விஷயத்தில், தர்மஸ்தலா மஞ்சுநாதா கோவில் நிர்வாகம் மீது, பொய் புகார் கூறியதும் தெரிந்தது. தற்போது சிக்கமகளூரில் வசிக்கும் சுஜாதா பட் நேற்று அளித்த பேட்டி: எனது 60 ஆண்டு வாழ்க்கையில், என் மீது எந்த கரும்புள்ளியும் இல்லை. ஆனால், சில மாதங்களாகவே எனது பெயர் கெட்டு விட்டது. தர்மஸ்தலா வழக்கில் பொய் புகார் அளித்தது, நான் செய்த மிகப்பெரிய தவறு. மகேஷ் திம்மரோடி குழுவினர் பேச்சை கேட்டு இருக்க கூடாது. தர்மஸ்தலா சென்று மஞ்சுநாதா, அன்னப்பா சாமியை தரிசனம் செய்வதுடன், கோவில் நிர்வாக அதிகாரி வீரேந்திர ஹெக்டேயிடம் மன்னிப்பும் கேட்பேன். எனது மகள் என்று, வசந்தி என்ற பெண்ணின் புகைப்படத்தை காட்டினேன். அந்த பெண் இறந்து விட்டதாக கூறுகின்றனர். ஆனால் அவர் உயிருடன் இருக்கலாம் என, எனக்கு சந்தேகம் உள்ளது. வசந்தியின் கணவருக்கும், நடிகரின் சகோதரர் ஒருவரும் நெருங்கிய நண்பர்கள். எனக்கு, அந்த நடிகரின் சகோதரர் உதவி செய்ததாக சிலர் கூறுகின்றனர். யாரும் எனக்கு உதவவில்லை. கன்னட பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்க வேண்டும் என ஆசை உள்ளது. இம்முறை எனக்கு அழைப்பு வரும் என நினைத்தேன். அது நடக்கவில்லை. ஒரு நாளாவது பிக்பாஸ் வீட்டிற்குள் சென்று வர வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி