உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு /  பெண்களுக்கான இடஒதுக்கீடு மசோதாவுக்கு ஆதரவும், எதிர்ப்பும்

 பெண்களுக்கான இடஒதுக்கீடு மசோதாவுக்கு ஆதரவும், எதிர்ப்பும்

லோக்சபா மற்றும் மாநில சட்டசபைகளில் பெண்களுக்கு, 33 சதவீதம் இடஒதுக்கீடு வழங்க, 2023 செப்டம்பரில், 'நாரி சக்தி வந்தன்' என்ற சட்டத்தை, மத்திய பா.ஜ., அரசு இயற்றியது. எனினும், இந்த சட்டம் மக்கள் தொகை கணக்கெடுப்பு, தொகுதி மறுவரையறை முடிந்த பின்னரே அமலுக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், லோக்சபாவில் நேற்று முன்தினம் தாக்கல் செய்யப்பட்ட பெண்கள் இட ஒதுக்கீடு திருத்த மசோதாவுக்கு மூன்றில் இரண்டு பங்கு ஆதரவு கிடைக்காததால் தோல்வி அடைந்தது. இம்மசோதா குறித்து, பல்வேறு கட்சி தலைவர்களின் கருத்து: முதல்வர் சித்தராமையா: மகளிர் இடஒதுக்கீடு மசோதாவுக்கு எங்களுக்கு எந்த எதிர்ப்பும் இல்லை. மகளிர் இட ஒதுக்கீடு மசோதா, 2023ம் ஆண்டிலேயே லோக்சபாவில் நிறைவேற்றப்பட்டது. ஆனால், அரசியலமைப்பு திருத்தம் கொண்டு வரப்பட்டதால், அது தோல்வி அடைந்தது. தொகுதிகளை பிரிக்காமல், ஒரே மசோதாவில் மகளிர் இடஒதுக்கீடு அறிமுகம் செய்யப்பட்டிருந்தால், அது நிறைவேற்றப்பட்டிருக்கும். முன்னாள் முதல்வர் எடியூரப்பா: பெண்களுக்கான இடஒதுக்கீட்டை எதிர்ப்பது என்பது சமத்துவ கொள்கையை எதிர்ப்பதற்கு சமம். பசவண்ணரின் அனுபவ மண்டபத்தில் பெண்களுக்கு சம வாய்ப்புகள் உள்ளது. பெண்கள் அரசியலில் நுழைவது அவர்களின் உரிமை. மத்திய அமைச்சர் குமாரசாமி: மகளிர் இடஒதுக்கீடு திருத்த மசோதாவின் தோல்வி, லோக்சபாவில், 30 ஆண்டுகளின் இருண்ட வரலாற்றை மீண்டும் கொண்டு வந்துள்ளது. 30 ஆண்டுகள் கடந்த பின்னரும், காங்கிரசின் பெண்கள் விரோத மனப்பான்மை மாறவில்லை என்பதை, லோக்சபா மீண்டும் கண்டுள்ளது. பா.ஜ., - எம்.எல்.சி., ரவி: அரசியலில் நுழைவது பெண்களின் உரிமை. ஆனால், காங்கிரஸ், தி.மு.க., உட்பட பல்வேறு கட்சிகள், பெண்களுக்கான இடஒதுக்கீடு கனவை சீர்குலைக்கும் வகையில் செயல்பட்டுள்ளன. இதை நாங்கள் கண்டிக்கிறோம். பெண்களுக்கு அரசியல் நீதி வழங்க வேண்டும் என, அம்பேத்கர் கனவு கண்டிருந்தார். சுகாதாரத்துறை அமைச்சர் தினேஷ் குண்டுராவ்: மத்திய அரசு, 2023ல் இச்சட்டத்தை கொண்டு வருவதாக கூறிய போது, காங்கிரஸ் ஒருமனதாக ஒப்புதல் அளித்து, அதை அமல்படுத்த வேண்டும் என்று கூறியது. ஆனால், மகளிர் இடஒதுக்கீட்டிற்கும் தொகுதி மறுவரையறைக்கும் எந்த தொடர்பும் இல்லை. கர்நாடகாவில், 224 சட்டசபை தொகுதிகளில், 33 சதவீதம் இடஒதுக்கீடு வழங்கப்பட்டால் எந்த பிரச்னையும் இல்லை. - நமது நிருபர் -:


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !