பெங்களூரு: ஆர்.எஸ்.எஸ்., ஊர்வலத்தில் பங்கேற்றதற்காக, பி.டி.ஓ., எனும் பஞ்சாயத்து மேம்பாட்டு அதிகாரி பிரவீன் குமாரை, சஸ்பெண்ட் செய்த அரசின் நடவடிக்கைக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளது. அரசின் உத்தரவை நிறுத்தி வைக்கும்படி கர்நாடக நிர்வாக தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது. ராய்ச்சூர் மாவட்டம், லிங்கசகூர் நகரில் அக்டோபர் 12ம் தேதி ஆர்.எஸ்.எஸ்., ஊர்வலம் நடந்தது. இதில் லிங்கசகூரின், ரோடலபன்டா கிராமத்தின் பி.டி.ஓ., எனும் பஞ்சாயத்து மேம்பாட்டு அதிகாரி பிரவீன் குமார் பங்கேற்றார். ஆர்.எஸ்.எஸ்., சீருடை அணிந்து, கையில் தடி ஏந்தியபடி ஊர்வலத்தில் சென்றார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவியது. அரசு ஊழியர்கள், சங்கங்கள், அமைப்புகளின் நிகழ்ச்சிகளில் பங்கேற்பது விதிமீறலாகும். எனவே இவரை சஸ்பெண்ட் செய்து, மாநில அரசு உத்தரவிட்டது. இதை எதிர்த்து கர்நாடக நிர்வாக தீர்ப்பாயத்தில், பிரவீன் குமார் மனுத் தாக்கல் செய்தார். இவரது மனு மீது நேற்று முன் தினம் விசாரணை நடந்தபோது, மனுதாரர் தரப்பில் ஆஜரான வக்கீல், 'அரசு ஊழியர்கள், ஆர்.எஸ்.எஸ்., ஊர்வலத்தில் பங்கேற்கலாம். இதற்கு எந்த கட்டுப்பாடும் இல்லை. ஆர்.எஸ்.எஸ்., ஊர்வலத்தில் அரசு ஊழியர்கள் பங்கேற்கும் உரிமையை, உச்ச நீதிமன்றமும், உயர் நீதிமன்றங்களும் உறுதி செய்துள்ளன. பல தீர்ப்புகளும் வந்துள்ளன. இதை பொருட்படுத்தாமல், அரசியல் நெருக்கடிக்கு பணிந்து, மனுதாரரை அரசு சஸ்பெண்ட் செய்துள்ளது' என வாதிட்டார். இதை ஏற்றுக்கொண்ட தீர்ப்பாயம், அரசியல் நோக்கில் பிரவீன் குமாரை, அரசு சஸ்பெண்ட் செய்துள்ளதாக கருத்து தெரிவித்து, அரசின் உத்தரவை நேற்று முன் தினம் நிறுத்திவைத்து உத்தரவிட்டது.
அரசுக்கு எச்சரிக்கை
இந்த விவகாரம் குறித்து, பா.ஜ., - எம்.பி., தேஜஸ்வி சூர்யா, 'எக்ஸ்' வலைதளத்தில் நேற்று வெளியிட்ட பதிவு: எந்த விதமான அச்சுறுத்தல் மூலமாகவும், நாட்டுக்காக ஆர்.எஸ்.எஸ்., பணியாற்றுவதை, யாராலும் தடுக்க முடியாது. ஆர்.எஸ்.எஸ். ஊர்வலத்தில் பங்கேற்றதால், பி.டி.ஓ., பிரவீன் குமாரை சஸ்பெண்ட் செய்து, மாநில அரசு பிறப்பித்திருந்த உத்தரவை, கர்நாடக நிர்வாக தீர்ப்பாயம், நேற்று முன் தினம் நிறுத்தி வைத்துள்ளது. இந்த தீர்ப்பு, மாநில அரசுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கையாகும். இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.