கர்நாடக அரசுக்கு தமிழ் சங்கம் கோரிக்கை
பெங்களூரு: கர்நாடக அரசு பல்வேறு மகான்களின் பிறந்த நாள் விழாவை கொண்டாடி வருகிறது. அந்த வரிசையில், திருவள்ளுவர் பிறந்த நாள் விழாவையும் கொண்டாட வேண்டும் என, தங்கவயல் தமிழ்ச் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. கர்நாடக அரசு, பசவண்ணர், கனகதாசர், நாராயணகுரு, வால்மிகி உட்பட பலரின் பிறந்த நாள் விழாக்களை கொண்டாடி வருகிறது. ஜாதி, மதம், மொழி என்ற பாகுபாடு இல்லாமல், வாழ்க்கை முறையை சீரமைத்து கொள்ள அறம், பொருள், இன்பம் என, 1330 குறளால் உலக பொது மறையை எழுதியவர் திருவள்ளுவர். அவரின் பிறந்த நாளையும், கர்நாடக அரசு கொண்டாடும் ஜெயந்தி விழா பட்டியலில் சேர்க்க வேண்டும் என்று கோரி, பெங்களூரில் நடந்த திருவள்ளுவர் தின விழாவில், தங்கவயல் தமிழ்ச் சங்க செயல் தலைவர் கமல் முனிசாமி, ஒருங்கிணைப்பாளர் ஆர்.பிரபுராம், எஸ்.அன்பரசன், திருமுருகன், கருணாகரன் ஆகியோர் மனு அளித்தனர். கர்நாடக சுகாதார நலத்துறை அமைச்சர் தினேஷ் குண்டுராவ் மூலம் கர்நாடக முதல்வர் சித்தராமையாவுக்கு இந்த மனு அளிக்கப்பட்டது.