| ADDED : நவ 25, 2025 06:02 AM
பெங்களூரு: 'ஊபர்' நிறுவனத்தில் கர்நாடகாவை சேர்ந்தவர்களுக்கு வேலை வழங்கப்படவில்லை என கூறி, அந்நிறுவனத்தின் தலைமை அலுவலகத்தை நேற்று, 100க்கும் மேற்பட்ட டாக்சி ஓட்டுநர்கள் முற்றுகையிட்டனர். பெங்களூரில் கார், பைக் டாக்சி செயலிகளில் பலர் ஓட்டுநர்களாக பணிபுரிந்து வருவாய் ஈட்டுகின்றனர். இந்த செயலிகளில் ஒன்றான 'ஊபர்' செயலியில் கர்நாடகாவை சேர்ந்த ஓட்டுநர்களை பணியில் சேர்ப்பதில்லை என, டாக்சி டிரைவர்கள் சில நாட்களாக கூறி வந்தனர். இந்நிலையில், எலக்ட்ரானிக் சிட்டி பிரகதி நகரில் உள்ள 'ஊபர்' நிறுவனத்தின் தலைமை அலுவலகத்தை, நேற்று காலையில், 100க்கும் மேற்பட்ட டாக்சி டிரைவர்கள் முற்றுகையிட்டனர். இதை பார்த்த ஊழியர்கள், அலுவலகத்தின் கதவை பூட்டிவிட்டு தப்பிச் சென்றனர். கதவை அங்கிருந்து இரும்பு கம்பியால் அடித்து உடைக்க முயன்றனர். பின், அலுவலகத்தை முற்றுகையிட்டு கோஷங்களை எழுப்பினர். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் லேசான தடியடி நடத்தி, அவர்களை அங்கிருந்து விரட்டினர். இதுகுறித்து அவர்கள் கூறியதாவது: மற்ற கார், பைக் டாக்சி செயலிகளில் வசூலிக்கப்படும் கட்டணத்தை விட, 'ஊபர்' செயலியில் அதிகளவு கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இந்த செயலியில் கர்நாடகாவை சேர்ந்த ஓட்டுநர்களுக்கு வேலை கொடுக்கப்படவில்லை. வட மாநிலம் உட்பட பிற மாநிலத்தவருக்கே வேலை கொடுக்கின்றனர். ஓட்டுநர் உரிமம் இல்லாத நபர்களுக்கு கூட வேலை வழங்கப்படுகிறது. இதுகுறித்து கேட்டால், 'அவர்கள் அதிகமாக விடுப்பு எடுக்க மாட்டார்கள்' என, ஊபர் நிறுவன ஊழியர்கள் அலட்சியமாக பதிலளிக்கின்றனர். இதனாலே, அலுவலகத்தை முற்றுகையிட்டோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.