ஜாதி வாரி சர்வே எடுக்க சென்ற ஆசிரியை சிறை வைப்பு
பெங்களூரு:ஜாதி வாரி சர்வே எடுக்கச் சென்ற ஆசிரியை ஒரு வீட்டில் சிறை வைக்கப்பட்டார். இதனால் பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டது. கர்நாடகாவில் ஜாதி வாரி சர்வே நடந்து வருகிறது. சர்வே எடுக்கச் செல்லும் ஊழியர்கள், பல விதமான பிரச்னைகளுக்கு ஆளாகின்றனர். நாய் கடித்து காயமடைந்த சம்பவங்களும் நடந்தன. பெங்களூரு, கொடிகேஹள்ளியின், ஹொசஹள்ளி பகுதியில் ஆசிரியை சுசீலம்மா என்பவர் நேற்று முன் தினம் ஜாதி வாரி சர்வே எடுக்கச் சென்றார். அதே பகுதியில் வசிக்கும் சந்தீப் என்பவரின் வீட்டுக்கு ஆசிரியை சென்றார். அவரிடம், ஆதார் கார்டு, ஐ.டி., கார்டுகளை காட்டும்படி கேட்டார். இதனால் கோபம் அடைந்த சந்தீப், ''நீங்கள் யார்? என் வீட்டுக்கு வந்து என்ன செய்கிறீர்கள்? எதற்காக ஐ.டி., கார்டு கேட்கிறீர்கள்? நீங்கள் உண்மையில் ஆசிரியரா?'' என கேட்டு தகராறு செய்தார். சுசீலம்மாவின் கையை பிடித்து இழுத்து, அவரது பணிக்கு இடையூறு செய்தார். சர்வே நடத்த வந்துள்ளதாக கூறியும், சந்தீப் பொருட்படுத்தவில்லை. சுசீலம்மா கையில் இருந்த ஆவணங்களை பறித்துக் கொண்டார். அவரை வீட்டுக்குள் வைத்து பூட்டினார். அவருடன் வந்திருந்த சக, ஊழியர்களாலும் எதுவும் செய்ய முடியாமல் பரிதவித்தனர். அடைத்து வைத்ததால் பீதியடைந்த சுசீலம்மா, போலீஸ் உதவி எண் 112ல் தொடர்பு கொண்டு, தன்னை காப்பாற்றும்படி முறையிட்டார். போலீசாரும் அங்கு வந்து, அவரை மீட்டனர். சந்தீப்பை கைது செய்து அழைத்துச் சென்றனர். தகவலறிந்த கல்வித்துறை அதிகாரிகள், சுசீலம்மாவுக்கு செல்போனில் தொடர்பு கொண்டு தைரியம் கூறினர். சர்வே எடுக்கச் செல்லும் பணியாளர்கள், இன்னும் என்னென்ன பிரச்னைகளை எதிர்கொள்ள வேண்டுமோ என்று புலம்புகின்றனர்.