| ADDED : நவ 27, 2025 07:30 AM
பெங்களூரு: பெங்களூரின் ஹலசூரின் ஹிந்து அறநிலையத்துறைக்கு உட்பட்ட, பிரசித்தி பெற்ற புராதன சோமேஸ்வரர் கோவிலில், ஆறேழு ஆண்டுகளாக, திருமணம் செய்ய அனுமதி அளிக்காததற்கான காரணத்தை விவரித்து, அரசுக்கு கோவில் நிர்வாக அதிகாரி கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில் அவர் கூறியிருப்பதாவது: சோமேஸ்வரர் கோவிலில், திருமணங்கள் நடத்தப்பட்டன. ஆனால் ஆறேழு ஆண்டுகளாக, திருமணம் செய்வதற்கு அனுமதிப்பதில்லை. இதற்கு முன்பு கோவிலில், திருமணம் செய்து கொண்ட தம்பதியர், கருத்து வேறுபாடு உள்ளிட்ட காரணங்களால், விவாகரத்து கேட்டு நீதிமன்றத்துக்கு சென்றனர். தம்பதியை விசாரிக்கும்போது, அவர்களுக்கு திருமணம் செய்து வைத்த அர்ச்சகர்களும் நீதிமன்றப் படிகளில் ஏற வேண்டிய நிலை ஏற்படுகிறது. இதனால் கோவிலில் திருமணம் நடத்த அர்ச்சகர்கள் மறுக்கின்றனர். இத்தகைய குளறுபடிகள் நடப்பதை தவிர்க்கவும், கோவிலுக்கு களங்கம் ஏற்படுவதையும், அவப்பிரசாரம் செய்யப்படுவதை தவிர்க்கும் நோக்கிலும், இதற்கு முன்பு இருந்த நிர்வாக அதிகாரி, அறநிலையத்துறை உயர் அதிகாரிகளின் கவனத்துக்கு கொண்டு சென்று, கோவிலில் திருமணங்கள் நடத்துவதை நிறுத்தினார். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.