நிறம் மாறும் தலக்காடு பாதாளேஸ்வரா சிவலிங்கம்
மைசூரின் டி.நரசிபுரா அருகே உள்ளது தலக்காடு கிராமம். காவிரி ஆற்றின் கரையை ஒட்டி அமைந்துள்ள இந்த கிராமத்தில் ஏராளமான பழங்கால கோவில்கள் உள்ளன. 1601ம் ஆண்டு, அன்றைய மைசூரு மன்னர் மஹாராஜா ராஜ உடையார், ஸ்ரீரங்கராயரின் மனைவி அலமேலம்மா அழகில் மயங்கி அவரை பிடித்து வர படைகளை அனுப்பினார்.அந்த படையிடம் இருந்து தப்பித்து ஓடும்போது தலக்காட்டின் மாலங்கி நதியில் வெள்ளம் கரைபுரண்டு ஓடியதால், இதற்கு மேல் தப்ப முடியாது என்று நினைத்த அவர், ஆற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார். முன்னதாக தலக்காடு மணலால் மூடி போகட்டும் என்று சாபமிட்டார்.அவரது சாபத்தால் தலக்காடு முழுதும் மணல் மூடியது. ஏராளமான கோவில்கள் மண்ணில் புதையுண்டன. நாளடைவில் மண்ணில் புதையுண்ட கோவில்கள் வெளியே எடுக்கப்பட்டன. அதில் ஒன்று பாதாளேஸ்வரா கோவில்.இந்த கோவில் சிவனுக்கு அர்ப்பணிக்கப்பட்டது. கங்க மன்னர்களால் இக்கோவில் கட்டப்பட்டதாக நம்பப்படுகிறது. இந்த கோவிலில் உள்ள சிவன் சிலை, நேரத்தை பொறுத்து நிறம் மாறும். காலையில் சிவப்பு நிறத்திலும், மதியம் கருப்பு நிறத்திலும், இரவு வெள்ளை நிறத்திலும் காணப்படும். இதன் மர்மம் என்ன என்று இதுவரை யாராலும் கண்டுபிடிக்க முடியவில்லை.தலக்காட்டில் உள்ள மற்ற கோவில்களை ஒப்பிடுகையில், பாதாளேஸ்வரா கோவில் வளமான வரலாறுகளை கொண்டுள்ளது. சிவனின் ஐந்து முகங்களை குறிக்கும் ஐந்து கோவில்கள் ஒன்றாக உள்ளன. 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடக்கும், பஞ்சலிங்க தரிசனம் இங்கு பிரசித்தி பெற்றது.கோவில் பாதாளத்திற்கு இருப்பது போன்ற அமைப்பை கொண்டுள்ளது. மணல் மேடுகள் மீது நடந்து சென்று, பக்தர்கள் கோவிலுக்கு செல்வது புதிய அனுபவமாக இருக்கும்.கோவிலின் நடை தினமும் காலை 8:30 மணி முதல் மாலை 5:30 மணி வரை திறந்திருக்கும். பெங்களூரில் இருந்து 135 கி.மீ., துாரத்தில் தலக்காடு அமைந்துள்ளது. பெங்களூரு சாட்டிலைட் பஸ் நிலையத்தில் இருந்து, டி.நரசிபுராவுக்கு கே.எஸ்.ஆர்.டி.சி., பஸ்கள் இயக்கப்படுகின்றன. சொந்த வாகனங்களில் செல்வோர், கோவில் முன்பு வாகனங்களை நிறுத்தும் வசதி உள்ளது. - நமது நிருபர் -