மாணவர் பரிஷ் இயக்கிய படம் தி கில்டி கில்லர்
- -நமது நிருபர் -: பெங்களூரு ஸ்ரீராமபுரம் லட்சுமி நாராயணபுரம் பகுதியில் வசிப்பவர் தினேஷ் குமார். வெள்ளி வியாபாரம் செய்கிறார். இவரது மனைவி சசிரேகா. இந்த தம்பதியின் மகன் பரிஷ், 20. மல்லேஸ்வரம் எம்.இ.எஸ்., கல்லுாரியில் பி.காம்., இறுதி ஆண்டு படிக்கிறார். இவர், 'தி கில்டி கில்லர்' என்ற படத்தை தயாரித்து உள்ளார். ஒரு மணி நேரம் 23 நிமிடங்கள் ஓடும் இந்தப் படத்தில் சிறப்பு என்னவென்றால் பொம்மைகள் தான் படத்தின் கதாநாயகர்கள். பரிஷ் தயாரித்த இந்த படத்திற்கு பாராட்டு சான்றிதழ் கிடைத்துள்ளது. படம் தயாரித்த அனுபவம் குறித்து பரிஷ் கூறியதாவது: சிறு வயதிலிருந்து எனக்கு பொம்மை படம் பார்ப்பது மிகவும் பிடிக்கும். ஒரு கட்டத்தில் பொம்மைகளை வைத்து நாமே படம் இயக்கினால் எப்படி இருக்கும் என்று நினைத்து பார்த்தேன். இது குறித்து, என் பெற்றோரிடம் கூறிய போது நல்ல யோசனையாக உள்ளது; முயற்சித்து பார்க்கும்படி கூறினர். குறிப்பாக தாய் சசிரேகா எனக்கு அதிக ஊக்கம் கொடுத்தார். இந்த ஊக்கத்தின் மூலம் உருவானதுதான் தி கில்டி கில்லர் திரைப்படம். இந்த திரைப்படத்தின் கருப்பொருள் என்னவென்றால் கோபத்தில் மனிதன் தவறு செய்துவிட்டு பின், மீண்டும் அதை நினைத்து வருந்துவதில் எந்த பிரயோஜனமும் இல்லை என்பதை எடுத்து கூறுவது தான். கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் தான் திரைப்படம் தயாரிக்கும் வேலையை செய்ய ஆரம்பித்தேன். ஏழு நாட்களில் முடித்து விட்டேன். இந்த திரைப்படம் திரில்லர், சஸ்பென்ஸ் அதிகம் நிறைந்ததாக இருக்கும். நான் தயாரித்த திரைப்படத்தை குஜராத், ஆமதாபாத்தில் உள்ள, 'வேர்ல்ட் ரெக்கார்ட் இந்தியா' என்ற தனியார் நிறுவனத்திற்கு அனுப்பி வைத்தேன். அந்த நிறுவனத்தினர், இளம் தலைமுறையினர் ஏதாவது சாதனை செய்தால் அவர்களை ஊக்குவிக்கும் வேலையை செய்து வருகின்றனர். அவர்கள் என் படத்தை பார்த்துவிட்டு நன்றாக இருப்பதாக கூறி, பாராட்டு சான்றிதழ் வாங்க வரும்படி கூறினர். சில காரணங்களால் எங்களால் குஜராத் செல்ல முடியவில்லை. இதனால் அவர்களே எங்கள் வீட்டிற்கு பாராட்டு சான்றிதழ் அனுப்பி வைத்தனர். இந்த சான்றிதழை இதற்கு முன் நான் படித்த சேஷாத்திரிபுரம் கல்லுாரிக்கு எடுத்து சென்று, வணிக துறை பேராசிரியர் சிவகுமாரிடம் காண்பித்து வாழ்த்து பெற்றேன். இது மிகவும் மகிழ்ச்சியான தருணமாக இருந்தது. எனது திரைப்படத்தை தற்போது கூகுள் டிரைவில் மட்டும் பார்க்க முடியும். அதற்கான லிங்க்: https://drive.google.com/file/d/1JQaeoIBTMeHW3pLbZRaGBSC8lf8JgSkZ/view?usp=drivesdk இன்னும் சென்சார் போர்டுக்கு அனுப்பி வைக்கவில்லை. கூடிய விரைவில் இதற்கான முயற்சிகளை மேற்கொள்வேன். சினிமா எடுப்பது ஒரு பக்கம் இருந்தாலும், படிப்பிலும் நன்கு கவனம் செலுத்தி, நல்ல வேலைக்கு செல்ல வேண்டும் என்ற ஆசையும் உள்ளது. மனிதர்களின் மனநிலையை பற்றி அறிந்து கொள்ளும், 'சைக்காலஜி' பற்றி படிக்கவும் எனக்கு நிறைய ஆர்வம் உள்ளது. உபன்யாசம் கேட்கிறேன். ஆன்மீக கதைகளை கேட்கும் ஆர்வமும் உள்ளது. பொதுவாக இளம் தலைமுறை வாழ்க்கையில் முன்னேற பெற்றோரின் ஊக்கமும், நல்ல நண்பர்களும் இருந்து விட்டாலே போதுமானது. இவ்வாறு அவர் கூறினார்.