உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு / மெட்ரோ ரயிலில் பயணித்த இதயம்

மெட்ரோ ரயிலில் பயணித்த இதயம்

பெங்களூரு: உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைக்காக, பெங்களூரின் கோரகுன்டேபாளையில் இருந்து பொம்மசந்திராவுக்கு மெட்ரோ ரயிலில் இதயம் எடுத்து செல்லப்பட்டது. பெங்களூரில் நிலவும் போக்குவரத்து நெரிசலால், அவசர சிகிச்சைக்காக ஆம்புலன்சில் செல்வோர் சரியான நேரத்திற்கு மருத்துவமனைக்கு செல்ல முடியாத நிலை உள்ளது. உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைக்கு, உடல் உறுப்புகளை எடுத்து செல்வது சவாலாக இருக்கிறது. இதனால், அவசர தேவைக்காக உடல் உறுப்புகளை, மெட்ரோ ரயிலில் கொண்டு செல்வது அதிகரித்து உள்ளது. இவ்வகையில், பெங்களூரு பொம்மசந்திரா நாராயணா ஹெல்த் சிட்டியில் சிகிச்சை பெறும் நோயாளிக்கு, உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைக்காக இதயம் தேவைப்பட்டது. இதயம், கோரகுன்டேபாளையாவில் உள்ள ஸ்பர்ஷ் மருத்துவமனையில் இருந்து, நாராயணா ஹெல்த் சிட்டிக்கு கொண்டு செல்ல முடிவு செய்யப்பட்டது. நேற்று காலை ஸ்பர்ஷ் மருத்துவமனை டாக்டர்கள், குளிரூட்டப்பட்ட பெட்டியில் இதயத்துடன், கோரகுன்டேபாளையாவில் இருந்து மெட்ரோ ரயிலில் மதியம் 12:23 மணிக்கு புறப்பட்டனர். மதியம் 1:24 மணிக்கு பொம்மசந்திரா மெட்ரோ ரயில் நிலையத்தை அடைந்தனர். அங்கிருந்து மருத்துவமனைக்கு இதயம் ஆம்புலன்சில் எடுத்து செல்லப்பட்டது. மெட்ரோ ரயில் மூலம் கோரகுன்டேபாளையாவில் இருந்து பொம்மசந்திராவை 61 நிமிடங்களில் கடந்தனர். உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைக்காக ஐந்தாவது முறையாக மெட்ரோ ரயிலில் இதயம் கொண்டு செல்லப்பட்டதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை