உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு / பிக்பாஸ் வீட்டை மூடும்படி மா.க.வாரியம் நோட்டீஸ்

பிக்பாஸ் வீட்டை மூடும்படி மா.க.வாரியம் நோட்டீஸ்

பெங்களூரு: 'கன்னட பிக்பாஸ் வீட்டை மூட வேண்டும்' என, மாநில மாசு கட்டுப்பாட்டு வாரியம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது. கன்னட 'பிக்பாஸ்' நிகழ்ச்சி 12வது சீசன் கடந்த மாதம் 28ம் தேதி துவங்கியது. இந்நிகழ்ச்சியை பிரபல கன்னட நடிகர் கிச்சா சுதீப் தொகுத்து வழங்குகிறார். இந்நிகழ்ச்சி துவங்கிய ஒரு வாரத்திலே பெரும் சர்ச்சையில் சிக்கி உள்ளது. கர்நாடக மாநில மாசு கட்டுப்பாட்டு வாரியம், 'பிக்பாஸ் வீட்டை மூட வேண்டும்' என, நோட்டீஸ் அனுப்பி உள்ளது. நோட்டீசில் கூறப்பட்டுள்ளதாவது: பெங்களூரின் புறநகரில் உள்ள பிடதி பகுதியில் உள்ளது பிக்பாஸ் வீடு. இந்த வீட்டில் ஒரு நாளைக்கு 2.5 லட்சம் லிட்டர் நீர் பயன்படுத்தப்படுகிறது. இந்த பயன்படுத்தப்பட்ட நீரை எவ்வித சுத்திகரிப்பும் செய்யாமல், திறந்தவெளியில் விடுகின்றனர். இதனால், சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படுகிறது. சுற்றியுள்ள தொழில் துறை பகுதிகளுக்கும் ஆபத்து நிலவுகிறது. அதுபோல, குப்பையும் தரம் பிரிக்காமல் கொட்டப்படுகிறது. குப்பையை தரம் பிரிக்கவும், கழிவுநீரை சுத்திகரிக்கவும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனால், சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படுகிறது. எனவே, பிக்பாஸ் வீட்டை மூட வேண்டும். இந்த வீட்டுக்கு வழங்கும் மின்சாரத்தையும் நிறுத்த வேண்டும். இது குறித்து பெஸ்காமிற்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி