உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு /  ராய்ச்சூரின் பழமையான சிவன் கோவில்

 ராய்ச்சூரின் பழமையான சிவன் கோவில்

- நமது நிருபர் -: ராய்ச்சூர் கல்லுார் பகுதியில் ஸ்ரீ மார்கண்டேஷ்வரர் கோவில் உள்ளது. சிவபெருமானுக்கு அர்ப்பணிக்கப்பட்ட கோவில் இது. மிகவும் பழமையானது. 12ம் நுாற்றாண்டில் விஜயநகர பேரரசின் கிருஷ்ணதேவராயர் ஆட்சிக்காலத்தில் கோவில் கட்டப்பட்டது. கிருஷ்ணதேவரா யர் இக்கோவிலை புனிதமாக கருதி வழிபட்டார். மேலும், சாளுக்கியர் ஆட்சியில் கோவில் புதுப்பிக்கப்பட்டதை கல்வெட்டுகள் பறைசாற்றுகின்றன. இக்கோவிலில் சிவபெருமான் மார்க்கண்டேஷ்வரர் ரூபத்தில் லிங்க வடிவில் பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார். இந்த கோவிலில் முன்னொரு காலத்தில், மார்க்கண்டேய முனிவர் சிவபெருமானை வேண்டி தியானம் மேற்கொண்டார். அப்போது, அவர் செய்த தவறுக்காக, அவரின் உயிரை பறிக்க எமதர்மர் வந்தார். எமதர்மனிடமிருந்து முனிவரை காப்பாற்ற, சிவபெருமான் மார்க்கண்டேஷ்வரர் ரூபத்தில் தோன்றினார். இதையடுத்து, அவ்விடத்தில் கோவில் கட்டப்பட்டதாக புராணங்களில் கூறப்பட்டு உள்ளது. இக்கோவிலில் உள்ள துாண்கள் இன்றும் பொலிவுடன் இருக்கின்றன. சிற்பங்கள், புராண கதைகளை பிரதிபலிக்கும் வகையில் உள்ளன. திருமணத்தடை நீங்கவும், குழந்தை பாக்கியம் வேண்டும் என பக்தர்கள் தங்கள் வேண்டுதல்களை முன்வைக்கின்றனர். வேண்டுதல் நிறைவேறிய பக்தர்கள், கோவிலில் தேங்காய் உடைத்து தங்கள் நேர்த்திக்கடனை செலுத்துகின்றனர். மஹா சிவராத்திரி அன்று இரவு முழுதும் சிறப்பு பூஜைகள் நடக்கும். பல பகுதிகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வருகின்றனர். இச்சமயத்தில் கோவிலில் விழாக்கோலம் ஏற்படும். கோவில் காலை 6:00 மணி முதல் மதியம் 12:30 மணி வரையும், மாலை 5:00 மணி முதல் இரவு 8:00 மணி வரை திறந்திருக்கும். பஸ்: ராய்ச்சூர் பஸ் நிலையத்திற்கு வர வேண்டும். அங்கிருந்து ஆட்டோ மூலம் கோவிலை அடையலாம். ரயில்: ராய்ச்சூர் ரயில் நிலையத்திற்கு வர வேண்டும். அங்கிருந்து டாக்சி மூலம் கோவிலை அடையலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை