| ADDED : நவ 22, 2025 04:59 AM
முட்டை உற்பத்தி குறைந்ததால் கர்நாடகாவில் ஒரு முட்டையின் விலை எட்டு ரூபாயை எட்டியுள்ளது. சமீப நாட்களாக காய்கறிகள், கீரைகளின் விலையுடன், தற்போது முட்டை விலையும் நாளுக்கு நாள் அதிகரிக்கிறது. ஒரு முட்டை விலை ஆறு ரூபாயில் இருந்து எட்டு ரூபாயாக அதிகரித்துள்ளது. கடந்தாண்டு முட்டை மொத்த விலையில், ஒன்றுக்கு 6.90 ரூபாயாக இருந்தது. இப்போது 7.20 ரூபாயாக அதிகரித்துள்ளது. காய்கறிகளின் விலை அதிகம் என்பதால், பல வீடுகளில் முட்டை பயன்படுத்தினர். இப்போது முட்டை விலையும் அதிகரித்துள்ளதால், திகைக்கின்றனர். வரும் நாட்களில் கிறிஸ்துமஸ், ஆங்கில புத்தாண்டு வருவதால் முட்டை விலை மேலும் அதிகரிக்கும் என, வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். கிறிஸ்துமஸ், ஆங்கில புத்தாண்டில் கேக்குகள் அதிகம் செய்வர். இந்த நேரத்தில் முட்டை அதிகமாக பயன்படும். தேவை அதிகமாவதால், விலை உயரும் என, வியாபாரிகள் எதிர்பார்க்கின்றனர். மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களில், இம்முறை வழக்கத்தை விட அதிகமான மழை பெய்தது. ஏரிகள், ஆறுகள் பெருக்கெடுத்து, பண்ணைகளில் தண்ணீர் புகுந்ததால், ஆயிரக்கணக்கான கோழிகள், வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டன. இதற்கிடையே நோய்கள் தாக்கியும் இறந்தன. இதன் விளைவாக முட்டை உற்பத்தி குறைந்துள்ளது. பள்ளிகள், அங்கன்வாடிகளில் சிறார்களுக்கு முட்டை வழங்கப்படுவதால், தேவை அதிகரித்துள்ளது. விலை உயர்வுக்கு இதுவும் ஒரு காரணமாகும். தற்போதைக்கு விலை குறைய வாய்ப்பில்லை. கோழிகளுக்கு வழங்கும் தீவனத்தின் விலை அதிகரித்துள்ளது. எனவே பண்ணை உரிமையாளர்கள் முட்டை விலையை அதிகரித்துள்ளனர். - நமது நிருபர் -