உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு / பிரயாக்ராஜில் மாயமான அர்ச்சகர் 6 மாதத்துக்கு பின் திரும்பினார்

பிரயாக்ராஜில் மாயமான அர்ச்சகர் 6 மாதத்துக்கு பின் திரும்பினார்

சிக்கமகளூரு: பிரயாக்ராஜில் நடந்த கும்பமேளாவில் காணாமல் போன அர்ச்சகர், ஆறு மாதங்களுக்கு பின் வீடு திரும்பினார். குடும்பத்தினர் மகிழ்ச்சி அடைந்தனர்.சிக்கமகளூரு மாவட்டம், கடூரு தாலுகாவின், தங்கலி கிராமத்தில் வசிப்பவர் நரசிம்மமூர்த்தி, 70. இவர் இங்குள்ள கோவில் ஒன்றில் அர்ச்சகராக பணியாற்றுகிறார். இவர் ஜனவரி 28ம் தேதி, பிரயாக்ராஜில் நடந்த மஹா கும்பமேளாவுக்கு உறவினர்களுடன் சென்றிருந்தார்.திரிவேணி சங்கமத்தில், அவர் காணாமல் போனார். மறுநாள் அங்கு நடந்த கூட்ட நெரிசலில் பலர் உயிரிழந்தனர். இதனால் அவரது குடும்பத்தினர் பீதியடைந்தனர். அவரது மகன் பத்ரிநாத், பிரயாக்ராஜுக்கு சென்று பல இடங்களில் தேடினார்.தந்தையை கண்டுபிடிக்க முடியாததால், அங்குள்ள போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் தேடியும் நரசிம்ம மூர்த்தியை கண்டுபிடிக்க முடியவில்லை.இதற்கிடையில், நரசிம்ம மூர்த்தி, பிரயாக்ராஜில் இருந்து, எப்படியோ மும்பைக்கு சென்றுள்ளார். அங்குள்ள, 'ஷ்ரத்தா ரிஹாபிலிடேஷன் சென்டர்' அமைப்பில் அடைக்கலம் பெற்றார். மறதி காரணமாக, அவருக்கு தன்னை பற்றிய விபரங்களை கூற தெரியவில்லை.இந்நிலையில், தங்கலி கிராமத்தின் பக்கத்து கிராமமான மொசலே கிராமத்தை சேர்ந்த சிலர், மும்பையில் வேலை செய்கின்றனர். அவர்கள் நரசிம்ம மூர்த்தியை அடையாளம் கண்டு, அமைப்பினருக்கு தகவல் கூறினர்.அமைப்பினர், நரசிம்மமூர்த்தியின் குடும்பத்தினரை தொடர்பு கொண்டு, முகவரி கேட்டறிந்தனர்.அமைப்பினரே அவரை அழைத்து வந்து, நேற்று முன்தினம் குடும்பத்தினரிடம் ஒப்படைத்தனர். ஆறு மாதங்களுக்கு பின், நரசிம்மமூர்த்தி கிடைத்ததால் குடும்பத்தினர் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை