தங்கவயல் சிறையில் பல ஆண்டாக பணிபுரிவோர் விரைவில் இடமாற்றம் டி.ஜி.பி., தகவல்
தங்கவயல்: ''தங்கவயல் சிறையில் தொடர்ந்து பல ஆ ண்டுகளாக பணியில் இருப்போர், விரைவில் இடம் மாற்றம் செய்யப்படுவர்,'' என, சிறைத்துறை டி.ஜி.பி., அலோக்குமார் தெரிவித்தார். சட்ட விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டவர்கள், நீதிமன்ற உத்தரவின்படி, தங்கவயல் சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர். தங்கவயல் சிறையில் உள்ள சில கைதிகள், சகல வசதிகளுடன் சொகுசாக இருப்பதாக, கர்நாடக சிறைத்துறை டி.ஜி.பி., அலோக்குமாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனால் அவர், கடந்த வியாழக்கிழமை இரவு தங்கவயல் சிறைக்கு திடீரென விஜயம் செய்தார். சிறையில் ஒழுக்ககேடாக சிலர் இருப்பதும், அவர்களுக்கு சிறை அதிகாரிகளே உதவியாக இருப்பதும் தெரியவந்தது. கைதிகள் சிலரை தனித்தனியாக விசாரித்தார். கொலை வழக்கு கைதி லோகேஷ் என்பவர் மொபைல் போன் பயன்படுத்தி வருவது தெரிய வந்ததால், அவர் வைத்திருந்த மொபைல் போனை பறிமுதல் செய்தனர். வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்த உத்தரவு பிறப்பித்தார். குற்றவாளிகள் திருந்தி ஒழுக்கமாக, சமுதாயத்தில் வாழ வேண்டும் என்பதற்காகவே, சிறைததண்டனை விதிக்கப்படுகிறது. மனைவி, பிள்ளைகள், குடும்பத்தினருக்காக திருந்தி வாழ வேண்டும் என்று, அவர் அறிவுரை வழங்கினார். தங்கவயல் சிறையில் தொடர்ந்து பல ஆண்டுகளாக பணியில் இருப்போர், விரைவில் இடமாற்றம் செய்யப்படுவர் என்றும் தெரிவித்தார். இதனால், தங்கவயல் சிறையில் எப்போதும் இல்லாத அளவுக்கு கடும் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.